பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்று வருமானம் வழங்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள், மத்திய வங்கியின் அனுமதி இல்லாமல் செயற்பட்டால் அவை சட்டவிரோதமானவை என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பொதுமக்களின் வைப்புகளை ஏற்றுக்கொள்ளும் பெருந்தோட்ட நிறுவனங்களை அங்கீகரிக்கவோ அல்லது அனுமதிக்கவோ மத்திய வங்கிக்கு எந்தவொரு நடைமுறையும் இல்லை என தெரிவித்தார்.
இவ்வாறான முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய வங்கியின் அனுமதி கிடையாது என்றும், அவை சட்டவிரோதமான வைப்புத் திட்டங்களாக கருதப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்களது பணத்தை விரைவாக மீளப் பெற முயற்சிக்குமாறும், பணத்தை மீளப் பெற முடியாத பட்சத்தில் பொலிஸார் அல்லது மத்திய வங்கியிடம் முறைப்பாடு செய்யுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
சட்டபூர்வமாக பொதுமக்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள், முதலில் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களாக (Licensed Finance Companies) பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறு பதிவு செய்யாமல் வைப்புகளை ஏற்றுக்கொள்வது இலங்கையில் முற்றிலும் சட்டவிரோதமானது என்றும் அவர் தெரிவித்தார்.





