விலங்குகளுக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுப்பவர்களுக்கு பாயும் சட்டம்

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய விலங்கு நலச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2026 ஜூலை 17ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் மூலம், விலங்குகள் மீது கருணை, தயவு மற்றும் சரியான கவனத்தைச் செலுத்துதல், அத்துடன் அவற்றின் பாதுகாப்பு,நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு உணவு, நீர் மற்றும் இருப்பிடத்தை மறுப்பதும் குற்றமாகும்

விலங்கு நலன் என்பது விலங்குகளைத் தாக்காமல் இருப்பதுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. அவற்றுக்குத் தேவையான உணவு, சுத்தமான நீர் மற்றும் பொருத்தமான இருப்பிடத்தை வழங்குவதும் விலங்கு நலனின் அடிப்படை அம்சங்களாகக் கருதப்படுகின்றன.

அதற்கமைய, விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல், அவற்றுக்கு ஏற்ற இருப்பிடத்தை வழங்காதிருத்தல், அளவுக்கு அதிகமாக வேலை வாங்குதல், தகுதியற்ற விலங்குகளை வேலைக்கு ஈடுபடுத்துதல் அல்லது ஏனைய செயற்பாடுகள் அல்லது செய்யத் தவறுதல்கள் மூலம் தேவையற்ற வலி அல்லது துன்பத்தை ஏற்படுத்துவதைத் தடை செய்ய இச்சட்டமூலம் முன்மொழிகிறது.

விலங்குகளுக்கு வேண்டுமென்றே செய்யப்படும் கொடூரச் செயல்கள் மட்டுமன்றி, அவற்றுக்குத் தேவையான அடிப்படைப் பராமரிப்பு கிடைக்காமல் விடப்படுவதற்கும் சட்டப் பொறுப்பை ஏற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சமாகும்.

அபராதம் மட்டுமன்றி சிறைத்தண்டனையும் புதிய சட்டமூலத்தின் விதிகளை மீறும் நபர்களுக்குக் கடுமையான தண்டனைகளை விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, விலங்குகளைக் கொடுமைப்படுத்துவது தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்படும் ஒருவருக்கு ரூபா 250,000 இற்கு மிகாத அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

விலங்கொன்றைக் கொடூரமான முறையில் கொல்வது தொடர்பாகக் குற்றவாளியாகும் ஒருவருக்கு ரூபா 500,000 இற்கு குறையாத அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம் என்றும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலங்குகளைக் கைவிடுவது குறித்தும் கவனம்

செல்லப்பிராணிகளை வளர்த்துவிட்டுப் பின்னர் அவற்றைக் கைவிடுவது தொடர்பிலும் புதிய விதிகளை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

நோயுற்ற அல்லது ஊனமுற்ற விலங்குகளைப் பொது இடங்களில் இறக்க விடுவது, விலங்குகளைக் கைவிடுவது மற்றும் அவற்றுக்குத் தேவையான சிகிச்சைகள் கிடைக்காமல் விடுவது போன்ற செயல்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சட்டவிரோதமான முறையில் விலங்குகளைக் கருத்தடை செய்தல் மற்றும் தகுதியற்ற நபர்களால் விலங்குகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தல் தொடர்பிலும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுப்பவர்களுக்கு பாயும் சட்டம்

விலங்குகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் சண்டைகள், விலங்குகளுக்குக் காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் வேட்டை விளையாட்டுகள் மற்றும் விலங்குகளுக்கு இடையேயான சண்டைகளை நடத்துதல் போன்ற செயற்பாடுகளும் புதிய சட்டங்களின் கீழ் தடை செய்ய முன்மொழியப்பட்டுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல், நிர்வகித்தல், அதற்காக வசதிகளைச் செய்து கொடுத்தல் அல்லது விளம்பரம் செய்தல் என்பனவும் குற்றமாகக் கருதப்படவுள்ளது.

விலங்குகளைக் கொண்டு செல்லும்போது பின்பற்ற வேண்டிய விதிகள்

விலங்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும்போது அவற்றுக்குத் தேவையற்ற வலி, துன்பம், காயம் அல்லது விபத்து ஏற்படாதவாறு செயற்பட வேண்டும் என்ற புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

அவ்விதிகளை மீறும் நபர்களுக்கு ரூபா 300,000 இற்கு குறையாத அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மிகையாத சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

செல்லப்பிராணி விற்பனை நிலையங்களுக்கு அனுமதிப்பத்திர முறைமை

செல்லப்பிராணி விற்பனை நிலையங்களுக்கு மற்றும் செல்லப்பிராணிகளைப் பெருகச் செய்யும் (இனப்பெருக்க) நிலையங்களுக்கு அனுமதிப்பத்திர முறைமையை அறிமுகப்படுத்தவும் புதிய சட்டமூலம் முன்மொழிகிறது.

இதன் மூலம் விலங்கு வர்த்தகம் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான செயற்பாடுகளை முறைப்படுத்தும் வாய்ப்புப் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமூலம் தயாரிக்கப்பட்ட விதம்

விலங்கு நலன் தொடர்பாகத் தயாரிக்கப்பட்டிருந்த சட்டமூலத்தின் விதிகளைப் பரிசீலித்து பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக, 2025 டிசம்பர் 29 ஆம் திகதியிட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக விவசாய, கால்நடை,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அந்தக் குழு சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் விலங்கு நலன் தொடர்பான இறுதிச் சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு 2026 மே 18 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டவரைஞருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதற்கமைய, சட்டவரைஞரால் விலங்கு நலச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்குச் சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சட்டம் மட்டுமன்றிப் பொறுப்பும்

விலங்கு நலன் தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டக் கட்டமைப்பு அமலுக்கு வந்தால், விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல், அவற்றைப் புறக்கணித்தல் மற்றும் விலங்குகள் சார்ந்த வணிகச் செயற்பாடுகளுக்கு மிகவும் தெளிவான சட்டக் கட்டமைப்பு உருவாகும்.

எனினும், சட்டத்தை இயற்றுவதன் மூலம் மட்டும் விலங்குகளின் நலனை உறுதிசெய்துவிட முடியாது. விலங்குகள் தொடர்பாகப் பொறுப்புடன் செயற்படுவது, அவற்றுக்குத் தேவையான அடிப்படைப் பராமரிப்பை வழங்குவது மற்றும் கொடுமைகளுக்கு எதிராகச் செயற்படுவது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் பொறுப்பாகும்.

விலங்குகளைத் துன்புறுத்திய பிறகு தண்டனை வழங்குவது மட்டுமன்றி, விலங்குகள் மீது மேலும் பொறுப்பான, கருணையுள்ள மற்றும் மனிதநேயமிக்க அணுகுமுறையைச் சமூகத்தில் வளர்ப்பதே இந்தப் புதிய விலங்கு நலச் சட்டமூலத்தின் நோக்கமாகும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore