அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் Lionel Messiயின் தந்தையும், நீண்டகால பிரதிநிதியுமான ஜோர்ஜ் ஹொராசியோ மெஸ்ஸி தனது 68ஆவது வயதில் காலமானார்.
நீண்டகாலமாக அடையாளம் வெளியிடப்படாத உடல்நலப் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக ஜோர்ஜ் மெஸ்ஸியின் உடல்நிலை தொடர்பில் கவலைகள் நிலவியிருந்தன. ஜூன் மாதம் லியோனல் மெஸ்ஸி FIFA உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்றுக்கொண்டிருந்தபோது, ஜோர்ஜ் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக மெஸ்ஸி குடும்பத்தினர் உறுதிப்படுத்தியிருந்ததுடன், அவரது உடல்நிலை தொடர்பான ஊகங்களைத் தவிர்த்து தனியுரிமையை மதிக்குமாறும் ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
லியோனல் மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையின் ஆரம்ப காலம் முதல் பார்சிலோனா காலம் உள்ளிட்ட அவரது நீண்டகால தொழில்முறை பயணத்தில் ஜோர்ஜ் மெஸ்ஸி முக்கிய பங்காற்றியுள்ளார். பல ஆண்டுகளாக மகனின் பிரதிநிதியாக செயற்பட்டு, அவரது தொழில்சார் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஏனைய வெளிக்கள நடவடிக்கைகளையும் நிர்வகித்து வந்தார்.
ரொசாரியோவில் இருந்து உலகின் முன்னணி கால்பந்து வீரராக லியோனல் மெஸ்ஸி உயர்ந்த பயணத்தில், அவரது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி முக்கியமான ஆதரவாளர்களில் ஒருவராக விளங்கியுள்ளார்.
ஜோர்ஜ் மெஸ்ஸி, அவரது மனைவி செலியா குசிட்டினி மற்றும் பிள்ளைகளான லியோனல், ரொட்ரிகோ, மத்தியாஸ் மற்றும் மரியா சோல் ஆகியோரை விட்டுச் சென்றுள்ளார்.





