இஸ்ரேலுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சமன் சந்திரசிறி, தனது நியமனத்தை உறுதிப்படுத்தும் நம்பிக்கைப் பத்திரத்தை (Letter of Credence) இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் அவர்களிடம் கையளித்துள்ளார்.
ஜெருசலேமில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையான Beit HaNassi இல் நடைபெற்ற நிகழ்வில் இந்த நம்பிக்கைப் பத்திரம் கையளிக்கப்பட்டதாக இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
தூதுவர் சமன் சந்திரசிறியை வரவேற்ற ஜனாதிபதி ஹெர்சோக், அவரது புதிய பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த அவர், தனது மறைந்த தந்தையும் முன்னாள் இஸ்ரேல் ஜனாதிபதியுமான சைம் ஹெர்சோக் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தையும் நினைவுகூர்ந்தார்.
மேலும், இஸ்ரேலின் பொருளாதாரத்திற்கு இலங்கைத் தொழிலாளர்கள் வழங்கும் பங்களிப்பை பாராட்டிய ஜனாதிபதி ஹெர்சோக், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழிலாளர் உறவுகள் பரஸ்பரம் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இலங்கையின் இயற்கை அழகு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா அனுபவங்களை இஸ்ரேலியர்கள் பெரிதும் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை மக்களின் வாழ்த்துகளை ஜனாதிபதி ஹெர்சோக்கிடம் தெரிவித்த தூதுவர் சமன் சந்திரசிறி, விவசாய தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதில் இலங்கை ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.
மக்கள் மட்டத்திலான வலுவான உறவுகள், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
25 ஆண்டுகளுக்கும் மேலான அரச சேவை அனுபவத்தைக் கொண்ட சமன் சந்திரசிறி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் விஞ்ஞான சிறப்புப் பட்டம் (BSc Special Degree) பெற்றுள்ளார்.
— TREND செய்திகள்





