பாடசாலை விடுதியில் பரவிய பேய் பீதி!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை விடுதியொன்றில் பரவிய பேய் பீதி காரணமாக, 600 இற்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் ஒரே நாளில் விடுதியை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி மாவட்டத்தின் மேல்காட் மலைப்பகுதியில் அமைந்துள்ள சிகல்தாரா எனும் இடத்தில், ‘டோமா’ அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பாடசாலை இயங்கி வருகின்றது. இதில் 800 இற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி கல்வி கற்று வருகின்றனர்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல், விடுதியில் தங்கியிருந்த சில மாணவிகள் நள்ளிரவு வேளையில் கொலுசு சத்தம் மற்றும் விசித்திரமான முனங்கல் சத்தங்கள் கேட்பதாக காப்பாளரிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சில மாணவிகள் திடீரென மயங்கி விழுந்தும், அழுது கொண்டே ஆக்ரோஷமாக சிரித்தும் விசித்திரமாக நடந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இதனால், பாடசாலை விடுதிக்குள் அமானுஷ்ய சக்தி அல்லது பேய் நடமாட்டம் இருப்பதாக காட்டுத்தீ போல் வதந்தி பரவியது.

அத்துடன் அப்பகுதியிலிருந்த மரமொன்றை வெட்டியதாலேயே பேய் கோபமடைந்துள்ளதாக பிரதேச மக்களும் திகில் தகவல்களை பரப்பியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த பெற்றோர், பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறி தமது பிள்ளைகளை உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்படி, 345 மாணவிகள் மற்றும் 263 மாணவர்கள் அடங்கலாக மொத்தம் 608 மாணவர்கள் இரவோடு இரவாக தமது உடைமைகளுடன் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். இதனால் பாடசாலை விடுதி ஒரே நாளில் முற்றாக வெறிச்சோடியுள்ளது.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, மாவட்ட அரச பொது வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர்கள் குழுவினர் உடனடியாக பாடசாலைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரிகள், “அங்கு எந்தவொரு அமானுஷ்ய சக்தியோ அல்லது பேயோ இல்லை. இது கடுமையான மனஅழுத்தம் மற்றும் பயத்தினால் உண்டாகும் ‘கூட்டு மனப்பிராந்தி’ (Mass Hysteria) எனும் தற்காலிக மனநல பாதிப்பாகும். ஒருவர் பயப்படுவதைப் பார்த்து மற்றவர்களும் கற்பனை செய்துகொண்டு அச்சமடையும் ஒரு சாதாரண மனநிலையே இது” என விஞ்ஞானபூர்வமாக விளக்கமளித்துள்ளனர்.

வைத்தியர்களின் இந்த தெளிவுபடுத்தலைத் தொடர்ந்து, அச்சம் நீங்கிய மாணவர்கள் தற்போது மீண்டும் விடுதிக்கு திரும்பத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore