செப்டம்பர் 19ஆம் திகதி முதல் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் சாரதி மற்றும் பயணிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீட் பெல்ட் பொருத்தப்படாத பழைய வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் செப்டம்பர் 19ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இதன் பின்னர் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலும் சீட் பெல்ட் பொருத்தப்பட்டிருப்பது கட்டாயமாகும்.
விதியை மீறி சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படலாம் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
மேலும், அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளில் சீட் பெல்ட் அணியாத பயணிகளிடமிருந்தும் அபராதம் அறவிடுவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2025 செப்டம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட Gazette Extraordinary No. 2455/29 அடிப்படையில் இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதிப் போக்குவரத்து விபத்துகளில் சீட் பெல்ட் அணியாததன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





