இலங்கையின் 8 மற்றும் 9ஆவது பாராளுமன்றக் கூட்டத்தொடர்களை உள்ளடக்கிய கணக்காய்வு அறிக்கையில், பாராளுமன்றத்தின் உயர் பதவிகளில் இருந்தவர்களின் எரிபொருள் பயன்பாடு மற்றும் வாகனச் சலுகைகள் தொடர்பில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக, சபாநாயகரின் உத்தியோகபூர்வ எரிபொருள் பயன்பாட்டிற்கு தெளிவான வரம்பு நிர்ணயிக்கப்படாதிருந்தமை கணக்காய்வில் அவதானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு சபாநாயகர் மாதமொன்றுக்கு சராசரியாக 3,994 லீற்றரும், 2024ஆம் ஆண்டு 6,122 லீற்றரும் எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் முறையே ரூ.19.37 மில்லியன் மற்றும் ரூ.26.04 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதி சபாநாயகரின் எரிபொருள் மற்றும் உத்தியோகபூர்வ வாகனப் பயன்பாட்டிலும் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறிய சம்பவங்கள் கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 2023–2024 காலப்பகுதியில் சொந்த சொகுசு வாகனத்திற்காக மாத்திரம் ரூ.8.54 மில்லியன் பெறுமதியான 21,299 லீற்றர் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட சில உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் மற்றும் வாகனச் சலுகைகள் ஏனைய அரச அதிகாரிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருந்ததாகவும் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2022 முதல் 2024 வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் 15,063 லீற்றர் எரிபொருளை, சுமார் ரூ.6.07 மில்லியன் செலவில் பயன்படுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சில அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்கு வரையறையற்ற எரிபொருள் வசதியும், தனிப்பட்ட பயணங்களுக்காக மாதாந்தம் 1,200 கிலோமீற்றர் வரையிலான பயணச் சலுகையும் வழங்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஜூன் மாதம் வரை தனிப்பட்ட பயணங்களுக்கான வரம்பை மீறிய தூரத்திற்கு நடைமுறையில் இருந்த குறைந்த கட்டண முறையால் அரசாங்கத்திற்கு சுமார் ரூ.2.71 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், 2022 ஜூலைக்குப் பின்னர் மேலதிக தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டுக்கான கட்டணம் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப திருத்தப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வாறான பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





