பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரச வைத்தியசாலையொன்றின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (PIMS) சொந்தமான வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது குறித்த பிரிவில் 16 பச்சிளம் குழந்தைகள் இருந்ததாகவும், அவர்களில் ஒரு குழந்தை மாத்திரம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் குளிரூட்டி (AC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், சம்பவ இடத்தில் ஏற்பட்ட புகையை அகற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





