15 வயதான இந்திய சதுரங்க வீரர் வந்தன் அலங்கார் சவை (Vandan Alankar Sawai), உலகின் முதல்நிலை சதுரங்க வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Chess.com நடத்திய Titled Tuesday ஆன்லைன் போட்டியின் இரண்டாவது சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில், வெள்ளை காய்களுடன் விளையாடிய வந்தன், கார்ல்சனை 50 நகர்வுகளில் தோற்கடித்தார்.
இந்தப் போட்டியில் வந்தனின் தரவரிசை 2,288 ஆக இருந்த நிலையில், கார்ல்சன் 2,823 தரவரிசையுடன் களமிறங்கியிருந்தார்.
ஆட்டம் ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே சமநிலையாகத் தொடர்ந்த நிலையில், 26ஆவது நகர்வில் கார்ல்சன் செய்த தவறை வந்தன் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டு முன்னிலை பெற்றார். பின்னர் அந்த முன்னிலையை வெற்றியாக மாற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தார்.
இந்த வெற்றியைப் பற்றி வந்தனின் குடும்பத்தினருக்கே உடனடியாக தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க ஆரம்பத்தில் அவர் ஆர்வம் காட்டாத நிலையில், குடும்பத்தினர் வற்புறுத்திய பின்னரே போட்டியில் கலந்து கொண்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
குறித்த போட்டியில் நான்கு சுற்றுகள் விளையாடிய வந்தன், மூன்று வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பதிவு செய்த பின்னர் களைப்பு காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
சதுரங்கத்தில் தனது அடுத்த இலக்காக International Master (IM) பட்டத்தைப் பெறுவதை வந்தன் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், எதிர்காலத்தில் சதுரங்கத்தை முழுநேரத் தொழிலாகத் தொடர்வாரா என்பது குறித்து அவர் இன்னும் உறுதியாக முடிவு செய்யவில்லை.





