நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 644 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகள் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் (NTB) தெரிவித்துள்ளது.
இவர்களில் 517 பேர் வெளிநாட்டவர்கள் எனவும், 127 பேர் நேபாள பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Bhotekoshi மற்றும் Trishuli ஆறுகளை அண்டிய பகுதிகளில் பயணித்தவர்கள் மற்றும் தங்கியிருந்தவர்களே காணாமல் போனவர்களில் அடங்குகின்றனர்.
நாட்டுவாரியாக, 178 இந்தியர்கள், 65 அமெரிக்கர்கள், 53 உக்ரைனியர்கள், 51 மலேசியர்கள், 35 ஆஸ்திரேலியர்கள், 33 பிரித்தானியர்கள் மற்றும் 25 கனடியர்கள் காணாமல் போயுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை காலை சுமார் 8:30 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் Rasuwa, Nuwakot, Dhading மற்றும் Gorkha ஆகிய மாவட்டங்களின் ஆற்றங்கரைப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, காணாமல் போனவர்களின் இருப்பிடத்தையும் பாதுகாப்பு நிலைமையையும் கண்டறியும் பணியில் நேபாள சுற்றுலா வாரியம், சுற்றுலா பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மீட்பு மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், 644 என்ற எண்ணிக்கை ஆரம்பகட்டப் பதிவுகளின் அடிப்படையிலானது என்றும், பயண நிறுவனங்கள், வழிகாட்டிகள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளுடன் இணைந்து தகவல்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.





