இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை வீரர் சோனல் தினுஷாவை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பாராட்டியுள்ளார்.
சோனல் தினுஷா ஒரு சிறந்த வீரர் என்றும், “டெண்டுல்கரைப் போல் தெரிகிறார்” என்றும் ராஜீவ் சுக்லா தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தினுஷா தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
காலி டெஸ்டில் 100 மற்றும் 84 ஓட்டங்களையும், கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 103 ஓட்டங்களையும் அவர் பதிவு செய்தார்.
இரண்டாவது டெஸ்டின் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைச்சதத்தை கடந்த அவர், அணியின் கீழ்வரிசை வீரர்களுடன் இணைந்து இந்திய அணிக்கு எதிராக போராடி வருகிறார்.
இந்த தொடரில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டதுடன், தொடர்ச்சியான ஓட்டக் குவிப்பின் மூலம் சோனல் தினுஷா இலங்கை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.





