பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இமாம் உல் ஹக் தொடர்பான சர்ச்சை தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இமாம் உல் ஹக் விளையாடியிருந்தார். எனினும், காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இரு இன்னிங்ஸ்களிலும் அவர் துடுப்பெடுத்தாடவில்லை.
இந்த காயம் தொடர்பாக சந்தேகங்கள் எழுந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளது. காயம் தொடர்பாக தவறான தகவல் வழங்கியதாக குற்றச்சாட்டு உறுதியானால், மேலதிக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்.
விவகாரத்தை முழுமையாக ஆராய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உயர்மட்ட விசாரணைக் குழுவொன்றையும் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேபோன்ற குற்றச்சாட்டு கடந்த 2025ஆம் ஆண்டு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போதும் இமாம் உல் ஹக் மீது முன்வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், முன்னாள் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் T20 அணித் தலைவர் முகமது ரிஸ்வானின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. சமீபத்திய போட்டிகளில் அவரது ஆட்டம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவருக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் அடுத்த கட்டத் தேர்வுகளில் ரிஸ்வானுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதும் தற்போது கவனம் பெற்றுள்ளது.





