பூட்டானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, செப்டெம்பர் 2ஆம் திகதி பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கை சந்தித்துள்ளார்.
திம்புவில் நடைபெற்ற இந்த சந்திப்பில், பூட்டானின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இலங்கை–பூட்டான் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
பூட்டானின் அபிவிருத்தி முயற்சிகளில் இலங்கையின் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்துவதற்கான ஆர்வத்தையும் மன்னர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் பூட்டானில் முதலீட்டு வலயமொன்றை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இருதரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.
இதனுடன், இளைஞர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்வதால் பூட்டான் எதிர்கொள்ளும் சனத்தொகை மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை தொடர்பான சவால்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் பூட்டான் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளும் தங்களது அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவமும் இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





