சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டினரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாதது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
பிபிசி மேற்கொண்ட ஆய்வின்படி, கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐந்து எத்தியோப்பியர்களில் கிப்ரோம் கின்ஃபே அரேகாவி மற்றும் சிகாபு கெப்ரெமரியம் ஆகியோரின் உடல்கள் இதுவரை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
சவுதி அரேபியாவின் அசிர் பகுதியில் உள்ள கமிஸ் முஷைத் சிறையில் ஜூன் 23ஆம் திகதி இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பான முன்கூட்டிய தகவல் வழங்கப்படவில்லை என்றும், இறப்புச் சான்றிதழ் அல்லது தனிப்பட்ட உடைமைகளும் வழங்கப்படவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கிப்ரோமின் தந்தை கின்ஃபே அரேகாவி, தனது மகன் நிரபராதி என தான் நம்புவதாகவும், அவரது உடலையோ இறப்புச் சான்றிதழையோ இதுவரை பெறவில்லை எனவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிகாபுவின் குடும்பத்தினர் அவரது உடலை சொந்த நாட்டிற்கு கொண்டு வராததற்கான காரணத்தை அறிய விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அவரது குடும்பத்தினர் உள்ளூர் தேவாலயத்தில் அடையாளப்பூர்வமான இறுதிச் சடங்கு மற்றும் பிரார்த்தனை நிகழ்வை நடத்தியுள்ளனர்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஐரோப்பிய சவுதி மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள், மரண தண்டனை நடைமுறை மற்றும் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காதது தொடர்பில் கவலைகளை வெளியிட்டுள்ளன.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தகவலின்படி, ஜூலை 27ஆம் திகதி வரையிலான ஓராண்டில் சவுதி அரேபியா 116 மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டில் 356 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக ஐரோப்பிய சவுதி மனித உரிமைகள் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் உடல்களை தூதரகத்தின் செலவில் சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு சவுதி சட்டம் அனுமதிப்பதாக கூறப்பட்டாலும், நடைமுறையில் அவ்வாறு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவங்கள் தங்களுக்குத் தெரியவில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் சவுதி உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களிடமும் லண்டனில் உள்ள சவுதி தூதரகத்திடமும் பிபிசி பதில் கோரியிருந்த போதிலும், இதுவரை பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்: பிபிசி தமிழ்





