இலங்கையில் Police Clearance Certificate பெறுவதற்கான இணையவழி விண்ணப்ப முறைமை அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி, விண்ணப்பதாரர்கள் முதலில் இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk சென்று Digital Services → Clearance Certificate பகுதியில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் பின்வரும் ஆவணங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்:
தேசிய அடையாள அட்டை (NIC)
கடவுச்சீட்டு
பிறப்புச் சான்றிதழ்
NIC மற்றும் கடவுச்சீட்டில் பெயர் வேறுபட்டிருந்தால், சத்தியப்பிரமாணப் பத்திரம் (Affidavit)
வெளிநாட்டில் வசிப்பவர்கள், தங்களது நெருங்கிய உறவினர் ஒருவரை தங்களது சார்பில் ஆவணங்களை சமர்ப்பிக்க அங்கீகரிக்க முடியும்.
பொலிஸ் நிலைய அதிகாரிகள் தேவையான தகவல்களை முறைமையில் பதிவு செய்வதற்கு உதவுவார்கள். அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து, தங்களது கையொப்பத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
இதற்காக ரூ.5,000 கட்டணம் அறவிடப்படுவதுடன், உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டும் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி ஊடாக இனி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்தவர்களும் மீண்டும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களது சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.
⚠️ முக்கிய அறிவிப்பு: தகவல்கள் முறைமையில் பதிவு செய்யப்பட்ட பின்னர், பொலிஸ் அதிகாரிகளால் அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது. எனவே, கையொப்பமிடுவதற்கு முன்னர் அனைத்து தகவல்களையும் கவனமாகச் சரிபார்க்குமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Clearance Certificate-க்கான இணையவழி வசதி, கணினி முறைமை முழுமையாக மீளமைக்கப்பட்ட பின்னர் மீண்டும் செயற்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





