அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் செய்தி சேகரிக்கச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து – 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் Chatsworth பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தி ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக லொஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளானது NBC Los Angeles நிறுவனத்தின் NewsChopper4 ஹெலிகாப்டர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக NBC4 தெரிவித்துள்ளதுடன், அவர்களை Eliana Moreno மற்றும் George Marciniw என அடையாளம் கண்டுள்ளது.
மூன்றாவது உயிரிழப்பு ஹெலிகாப்டர் தரையில் விழுந்தபோது அப்பகுதியில் இருந்த ஒருவருக்கு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தினால் ஏற்பட்ட தீ அருகிலிருந்த நான்கு வாகனங்கள் மற்றும் இரண்டு சேமிப்பு கொள்கலன்களுக்கும் பரவியதாகவும், 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் முன்னதாக SUV வாகனம் ஒன்று நகரப் பேருந்துடன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்து, ஆறு பேர் காயமடைந்திருந்தனர். இதனை செய்தி சேகரிப்பதற்காக பல செய்தி ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் இருந்த நிலையில், NewsChopper4 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை (NTSB) இந்த விசாரணைக்கு தலைமை வகிக்கவுள்ளது.





