சவுதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு, சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூதிடம் இலங்கையின் தேசிய ஷூரா சபை (NSC) கோரிக்கை விடுத்துள்ளது.
செப்டெம்பர் 19ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக Newswire தெரிவித்துள்ளது.
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை அவமதித்ததாகக் கூறப்படும் வழக்கில் அனோஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை சவுதி நீதித்துறையின் தீர்ப்பையோ அல்லது அந்நாட்டின் சட்ட நடைமுறையையோ கேள்விக்குள்ளாக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்படவில்லை என்றும், மனிதாபிமான அடிப்படையிலேயே மன்னிப்புக் கோரப்படுவதாகவும் தேசிய ஷூரா சபை தெரிவித்துள்ளது.
அனோஜன் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்ததுடன், சமூக ஊடகங்கள் ஊடாக பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதாகவும், முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு மரியாதை செலுத்துவதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், அவர் குறைந்த வருமானம் கொண்ட இலங்கைத் தொழிலாளி என்றும், பெரிய குடும்பத்தை ஆதரித்து வருவதால் விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை செலுத்துவதில் சிரமம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஆண்டின் இறுதியில் திருமணம் செய்ய அவர் திட்டமிட்டிருந்ததாகவும், தற்போதைய சூழ்நிலை இரு குடும்பங்களுக்கும் சிரமத்தையும் நிச்சயமற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தேசிய ஷூரா சபை தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அனோஜனின் நிலைமையை மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து கருணை காட்டுவது அவரது குடும்பத்தினருக்கு நிவாரணமாக அமையும் என்றும், இலங்கை–சவுதி அரேபியா இடையிலான நீண்டகால நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் சபை தெரிவித்துள்ளது.





