அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் மக்கள் சேவை மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டி, பாறுக் நஜி அவர்களுக்கு “அட்டாளைச்சேனை பிரதேசத்தின் ஓயாத குதிரை” என்ற கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
களம் First ஊடக வலையமைப்பின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலமுனையைச் சேர்ந்த பாறுக் நஜி, அஹமது லெப்பை முஹம்மது பாறுக் – நாஹூர் தம்பி ஆமினா உம்மா தம்பதியினரின் ஆறாவது புதல்வராகப் பிறந்தவர். பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம் மற்றும் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் கல்வி கற்றுள்ளார்.
கட்டுமானப் பொறியியல், மனித வள முகாமைத்துவம், ஆங்கிலம் மற்றும் சர்வதேச உறவுகள் உள்ளிட்ட துறைகளில் கல்வித் தகைமைகளைப் பெற்றுள்ள அவர், இளமைக் காலம் முதலே சமூக சேவையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
British Council, ACTED, Sri Lanka Unites, ChildFund International உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து இளைஞர் மேம்பாடு, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சமூக அபிவிருத்தி சார்ந்த பணிகளில் பங்களித்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் ஆலம்குளம், சம்புநகர், ஒலுவில், தீகவாபி, திராய்க்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம், கல்வி மற்றும் சமூக நலனுக்காகவும் பணியாற்றியுள்ளார்.
அரசியல் பயணத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் ALM. அதாஉல்லா அவர்களின் ஆதரவுடன் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இளம் உறுப்பினராகவும் பின்னர் பிரதித் தவிசாளராகவும் தெரிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளம், மழை உள்ளிட்ட அனர்த்த காலங்களில் மக்களுடன் களத்தில் நின்று அவசர உதவிகள் மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்ததுடன், 2023 ஜனவரி 1 முதல் இலங்கை இளைஞர் தூதுவராகவும் நியமிக்கப்பட்டு இளைஞர் மேம்பாடு மற்றும் சமூக நல்லிணக்கப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதித் தவிசாளர் பதவியை ராஜினாமா செய்த பின்னரும், பிரதேச சபை உறுப்பினராக தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இடையறாத சேவையைப் பாராட்டியே இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.





