சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தின் விசேட தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் செல்லவுள்ள இந்தக் குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட தூதுக்குழு சவூதி அரேபிய மன்னரை சந்தித்து, சிவராசா அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியில் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளது.
இதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சார்பில் சவூதி மன்னருக்கு அனுப்பப்படும் கடிதமும் தூதுக்குழுவினரால் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஏற்கனவே அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர வழிமுறைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அனோஜன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக சட்டபூர்வமாக சவூதி அரேபியாவுக்குச் சென்றவர் என்பதால், அவரது வழக்குடன் தொடர்புடைய இதுவரை ஏற்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் அனைத்து செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், மேன்முறையீட்டுக்காக அவரது குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட பணம் மீள வழங்கப்படும் என்றும், அனோஜனை விடுவிப்பதற்கான அனைத்து சட்ட மற்றும் இராஜதந்திர வழிகளிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





