இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவுக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான IMF பணிப்பாளர் எவான் பாபஜார்ஜியோ தலைமையிலான குழு இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளது.
IMF இன் நீடிக்கப்பட்ட நிதியமைப்பின் கீழ் இலங்கை முன்னெடுத்து வரும் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் ஏழாவது மதிப்பாய்வு தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் விளக்கியுள்ளார்.
மேலும், வெளிப்புற பொருளாதார காரணிகளை திறம்பட கையாள்வது, அபிவிருத்திப் பங்காளிகளுடன் இணைந்து செயற்படுவது மற்றும் பொறுப்புக்கூறல் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், சொத்து பிரகடனங்கள் மூலம் சமர்ப்பிக்கப்படும் தகவல்களின் தனியுரிமை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு இடையிலான சமநிலை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.





