இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்று வரும் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க, முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு மற்றும் இறுக்கம் காரணமாக நாடு திரும்பவுள்ளார்.
இந்த பிரச்சினை காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹசரங்க விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக அணியில் இடம்பெற்ற சச்சிந்து கொலம்பகே, தனது அறிமுக ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஹசரங்கவின் உடல்நிலை பாதிப்பு எந்தளவுக்கு தீவிரமானது என்பது தொடர்பில் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், எஞ்சியுள்ள இங்கிலாந்து தொடரில் அவரை விளையாட வைத்து ஆபத்தை ஏற்படுத்த வேண்டாம் என அணியின் நிர்வாகமும் தேர்வாளர்களும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஹசரங்க நாடு திரும்பி முதுகுப் பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதுடன், ஓய்வு எடுத்துக்கொண்டு எதிர்வரும் ஒக்டோபரில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்குத் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





