திருகோணமலையில் 2008ஆம் ஆண்டு இரு பெண்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற இரு பெண் அதிகாரிகள் எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பிரதான நீதவான் M.S.M. சம்சுதீன் முன்னிலையில் குறித்த இரு சந்தேகநபர்களும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதுடன், ஒக்டோபர் 5ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிலாபம் மற்றும் ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்த குறித்த இரு ஓய்வுபெற்ற கடற்படை பெட்டி அதிகாரிகளும், மற்றொரு நீதிமன்ற வழக்குடன் தொடர்புடைய விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த சசிகுமார் தேன்மொழி மற்றும் மேரி டெல்சியா ஆகிய இரு பெண்கள், 2008 மே 13ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் போனதாக இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
CID விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த இரு பெண்களும் அக்காலத்தில் திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் அமைந்திருந்த “Gun Site” என அழைக்கப்படும் நிலத்தடி இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“Gun Site” என்பது திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் அமைந்திருந்த நிலத்தடி அறைகளைக் கொண்ட இடமாகும். இந்த இடம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிறைச்சாலையாக இருக்கவில்லை என முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகெத்தென்ன 2025ஆம் ஆண்டு CID விசாரணையில் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், இந்த இடம் கடற்படையின் உத்தியோகபூர்வ புலனாய்வுப் பிரிவிலிருந்து தனியான “Special Intelligence Unit” ஒன்றினால் பயன்படுத்தப்பட்டதாகவும், அந்தப் பிரிவு கமாண்டர் D.K.P. தசநாயக்கவின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களின் மேலதிக விசாரணைகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





