இலங்கைக்கு தெற்கே கடலில் ஆபத்தில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள், இலங்கை கடற்படையினரின் ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி, இலங்கைக்கு தெற்கே கடற்பகுதியில் இந்தோனேசியாவுக்குச் சொந்தமான ‘KM Garuda Jaya VI’ என்ற மீன்பிடிப் படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, அதில் பயணித்த 25 பேரும் ஆபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்பு பொறுப்புப் பகுதிக்கு உட்பட்ட கடற்பரப்பில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் ஆபத்தில் இருந்த 25 பேரையும் ‘MV Moonstone’ என்ற வர்த்தகக் கப்பல் மீட்டு, கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) தகவல் வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, MRCC ஒருங்கிணைப்பின் கீழ் இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளை அனுப்பி, MV Moonstone கப்பலில் இருந்த மீனவர்களை கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
மீட்கப்பட்ட 25 பேரும் நேற்று (24) பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்கள் இலங்கையில் உள்ள இந்தோனேசிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





