சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜன், மரண தண்டனை நிறைவேற்றப்படும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சிவராசா ஹம்சிதன் தெரிவித்துள்ளார்.
அனோஜனுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக 20 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யுமாறு சௌதி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
27 வயதான சிவராசா அனோஜன், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர், அதனுடன் தொடர்புடைய வேலைக்காக கடந்த ஆண்டு சௌதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னணி
கல்முனை பகுதியில் இடம்பெற்ற நாய் தாக்குதல் சம்பவம் தொடர்பான சமூக ஊடக விவாதத்தின் பின்னணியில், அனோஜன் சமூக ஊடகத்தில் நபிகள் நாயகம் தொடர்பான பதிவொன்றை வெளியிட்டதாகவும், பின்னர் அந்தப் பதிவை நீக்கியதாகவும் BBC தெரிவித்துள்ளது.
அந்தப் பதிவு ஸ்கிரீன்ஷாட் செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பரவியதுடன், பின்னர் அரபு மொழியிலும் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சௌதி அரேபியாவில் அனோஜன் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சௌதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக BBC தெரிவித்துள்ளது.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் பின்னர், சௌதி மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை
அனோஜனின் விடுதலைக்காக சௌதி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது விடுதலைக்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக நாடாளுமன்ற குழுவொன்றை அமைக்கவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக BBC தெரிவித்துள்ளது.
அனோஜனின் குடும்பத்தினரை ஜனாதிபதி அண்மையில் சந்தித்து கலந்துரையாடியதுடன், அவரை விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தார்.
இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சும் சௌதியிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் மற்றும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.





