நெல் வயல் பணிகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், வயல் பணிகளில் ஈடுபடும் விவசாயிகள் லெப்டோஸ்பைரோசிஸ் (எலிக்காய்ச்சல்) நோய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
மழைக்காலங்களில் நீர் மற்றும் சேற்று நிலங்களில் பணியாற்றும் விவசாயிகளுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், வயல் பணிகளுக்குச் செல்லும் முன்பாக உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, லெப்டோஸ்பைரோசிஸ் தடுப்பு நடவடிக்கையாக Doxycycline மாத்திரைகள், தகுதியுடைய விவசாயிகளுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நெல் வயல் பணிகளில் ஈடுபடவுள்ள விவசாயிகள் விடுமுறை நாட்கள் தவிர்ந்த அனைத்து நாட்களிலும் சம்மாந்துறை MOH அலுவலகத்தை அணுகி, தேவையான சுகாதார ஆலோசனைகளையும், தகுதி இருப்பின் தடுப்பு மருந்தையும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வயல் பணிகளின்போது சேற்று நீர் அல்லது அசுத்தமான நீருடன் நேரடித் தொடர்பை முடிந்தவரை தவிர்ப்பதுடன், பாதுகாப்பான காலணிகள் மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவதும் முக்கியமானது.
லெப்டோஸ்பைரோசிஸ் நோய் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள சுகாதார நிலையத்தை அணுகுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
🌾 வயல் பணிக்கு செல்லும் முன் – உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!
🏥 சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகம்





