சம்மாந்துறை பகுதியில் வீதியோரங்களில் மீன் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட 12 மீன் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்களது வழக்கு இன்று (01) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த 17.09.2026 அன்று வீதியோரத்தில் மீன் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 பேருக்கு எதிராக B அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 12 பேரில் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவருக்கான வழக்கு விசாரணை எதிர்வரும் 17.12.2026 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜரான ஏனைய 11 பேரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000/- தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீதியோரங்களில் மீன் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும், பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மாத்திரமே மீன் விற்பனை செய்ய வேண்டும் எனவும் கௌரவ நீதவான் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.
பொது சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, மீன் விற்பனையாளர்கள் உரிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், வீதியோரங்களில் மீன் விற்பனை நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமும் இன்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மீன் விற்பனையாளர்கள் பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மாத்திரம் தமது விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





