இங்கிலாந்தின் நியூகாசில் பகுதியில் உள்ள இரண்டு ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கு ஹெபடைட்டிஸ் A தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Benton Park மற்றும் Central Walker ஆரம்பப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களிடையே இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, UK Health Security Agency (UKHSA) சார்பில் பெற்றோருக்கு நோயின் அறிகுறிகள் மற்றும் தொற்று பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், பாடசாலைகளில் உள்ள ஏனைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தற்போதைய நிலையில் தொற்று ஏற்படும் அபாயம் குறைவாகவே உள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த இரண்டு பாடசாலைகளிலும் ஹெபடைட்டிஸ் A தொற்று பரவியதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UKHSA North East பிராந்தியத்தின் சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசகர் Jonathan Lawler தெரிவிக்கையில், இரு பாடசாலைகளுடனும் தொடர்புடைய நிறுவனங்களுடனும் இணைந்து தேவையான அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் சுகாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்களை பாடசாலைகள் பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹெபடைட்டிஸ் A என்றால் என்ன?
ஹெபடைட்டிஸ் A என்பது கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் தொற்று ஆகும். பொதுவாக பாதிக்கப்பட்ட நபரின் மலத்தின் நுண்துகள்களால் மாசுபட்ட உணவு அல்லது நீர் மூலம் இது பரவுகிறது.
அத்துடன், பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலமும் அல்லது வைரஸைக் கொண்ட நபர் கையாளும் உணவை உட்கொள்வதன் மூலமும் தொற்று ஏற்படக்கூடும்.
இந்த நோயின் அறிகுறிகளில் காய்ச்சல், காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு, வாந்தி, குமட்டல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், தோலில் அரிப்பு மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவை அடங்கும். மஞ்சள் காமாலை ஏற்பட்டால் கண்கள் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக மாறக்கூடும்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு அறிகுறிகள் லேசாகவே காணப்பட்டாலும், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு ஹெபடைட்டிஸ் A தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
தடுப்பூசி முக்கிய பாதுகாப்பு நடவடிக்கை
ஹெபடைட்டிஸ் A-க்கு எதிரான தடுப்பூசி தொற்றைத் தடுப்பதற்கான முக்கியமான வழிகளில் ஒன்றாகும். இருப்பினும், இங்கிலாந்தில் இந்தத் தொற்று ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், பொதுமக்களுக்கு வழக்கமான தடுப்பூசி திட்டத்தில் இது சேர்க்கப்படவில்லை.
அதிக ஆபத்து உள்ளவர்கள், நீண்டகால கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொற்று அதிகமாக காணப்படும் நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் போன்றவர்களுக்கு தடுப்பூசி பரிந்துரைக்கப்படலாம்.
இதேவேளை, 2024ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 889 உறுதிப்படுத்தப்பட்ட ஹெபடைட்டிஸ் A தொற்று சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு பாடசாலைகளும் தற்போது வழமைபோன்று இயங்கி வருவதுடன், சுகாதார அதிகாரிகள் தொற்று தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.





