செர்பியாவில் முன்னாள் ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச்சின் கட்சி தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, வெற்றிபெற்ற மாணவர் ஆதரவு அரசியல் இயக்கம் பொலிஸ், புலனாய்வுப் பிரிவு மற்றும் நீதித்துறையின் முக்கிய அதிகாரிகள் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
பெல்கிரேடில் நாடாளுமன்றத்திற்கு எதிரே அமைந்துள்ள பயனியர்ஸ் பூங்காவில் நடைபெற்ற முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில், சட்டத்தை மீறிய பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பொலிஸ் தலைவர், BIA பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் ஆகியோரையும் அவர்கள் குறிப்பாகச் சுட்டிக்காட்டினர்.
ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் உருவான இயக்கம்
2024 நவம்பர் மாதம் செர்பியாவின் நோவி சாட் நகரில் ரயில் நிலையத்தின் கூரைப் பகுதி இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும், நாட்டில் நிலவும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் போராட்டங்களிலிருந்து உருவான மாணவர் இயக்கமே தற்போது தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும் நிலையை அடைந்துள்ளது.
இயக்கத்தின் தேர்தல் திட்டத்தில், ஊழலைத் தடுத்து, அரசுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொத்துக்களை மீட்டெடுத்து, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் நேரடியாக முதலீடு செய்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊடகத் தலைவரும் பதவி விலகல்
முன்னாள் ஆட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் பதவி விலகும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளன. செர்பிய அரசுத் தொலைக்காட்சி நிறுவனமான RTS இன் பணிப்பாளர் மஞ்சா கிர்சிக் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் நலன்களுக்காகவே RTS செயற்பட்டதாகவும், மக்களுக்கு உண்மையான தகவல்களைப் பெறும் உரிமை இருப்பதாகவும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் மிர்ஜானா நிகோலிக் தெரிவித்துள்ளார்.
மேலும், Telekom Srbija நிறுவனத்தின் தலைவரான விளாடிமிர் லூசிச்சையும் பதவியிலிருந்து மாற்றுவதற்கு புதிய ஆட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
ஆறு மாதங்களுக்குள் முக்கிய சீர்திருத்தங்கள்
முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும் புதிய நாடாளுமன்ற உறுப்பினருமான டெயான் ஷோஷ்கிச், அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஊடக சுதந்திரம், ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையில் அரச நிறுவனங்களின் செயற்பாடு ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரசாங்கம் அல்லது ஆளும் கட்சியுடன் தொடர்புடையவர்களில் மக்களின் உரிமைகளை மீறியவர்கள் அரச பதவிகளில் தொடர்வதைத் தடுக்கும் சட்டத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாட்டின் முக்கிய அரச நிறுவனங்கள் பல ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி வுசிச் மற்றும் அவரது கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளதால், இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது சவாலானதாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா தொடர்பான சவால்
செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வேட்பாளர் நாடாக இருந்தாலும், ரஷ்யா மற்றும் சீனாவுடனும் நெருங்கிய உறவுகளைப் பேணி வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு ஆரம்பமான 2022ஆம் ஆண்டிலிருந்து மொஸ்கோவுக்கு எதிரான தடைகளில் செர்பியா இணைந்திருக்கவில்லை. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதன் உறவுகளில் சிக்கல்கள் நிலவி வருகின்றன.
மாணவர் இயக்கத்தின் வெற்றியை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளதுடன், சட்டத்தின் ஆட்சி, ஊடக சுதந்திரம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது மாணவர் இயக்கத்தின் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடத்தைப் பெறவில்லை.
மீண்டும் அரசியல் போட்டிக்கு தயாராகும் முன்னாள் ஆளும் கட்சி
புதிய அரசாங்கம் உள்நாட்டு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் புதிய ஆட்சிக்கு மற்றுமொரு சவாலாக அமையலாம்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகப் போட்டியிட முடியாத அலெக்சாண்டர் வுசிச், தேர்தலில் தோல்வியடைந்த தனது செர்பிய முன்னேற்றக் கட்சி மீண்டும் அரசியல் வெற்றியைப் பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
மாணவர் இயக்கத்தின் புதிய அரசாங்கம் ஊழலை ஒழித்து, அரச நிறுவனங்களைச் சீரமைத்து, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுமா என்பது தற்போது சர்வதேச அரசியல் அவதானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.





