பிரான்ஸில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, குறைந்த சம்பளம் மற்றும் பொதுச் சேவைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் பாரிய வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நவம்பர் 5ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் இந்தப் போராட்டங்களில் ஐந்து முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளதுடன், நாடு முழுவதும் சுமார் 5 இலட்சம் முதல் 7 இலட்சம் வரையான மக்கள் பங்கேற்பார்கள் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
தலைநகர் பாரிஸில் மாத்திரம் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைக்கக் கோரிக்கை
கடந்த செப்டம்பர் மாதம் பாடசாலைகளில் நிலவும் வசதிக் குறைபாடுகள் மற்றும் கல்வி வளங்களின் பற்றாக்குறைக்கு எதிராக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள், தற்போது தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் நாடளாவிய இயக்கமாக விரிவடைந்துள்ளன.
அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த ஐந்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து சம்பள உயர்வு, வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொதுச் சேவைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
பிரான்ஸில் தற்போது ஒரு மணித்தியாலத்திற்கான குறைந்தபட்ச சம்பளம் 12.31 யூரோவாக உள்ள நிலையில், அதனை அதிகரிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
CFDT தொழிற்சங்கத் தலைவர் மேரிலிஸ் லியோன், குறைந்தபட்ச சம்பள உயர்வு மாத்திரம் போதுமானதல்ல என்றும், தொழிலாளர்களின் மாதாந்த நிகர சம்பளத்தில் 100 யூரோ அதிகரிப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
70,000 பாதுகாப்புப் படையினர் கடமையில்
நாடளாவிய ஆர்ப்பாட்டங்களின்போது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சுமார் 70,000 பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லோரன்ட் நூனெஸ் தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நவம்பர் 5ஆம் திகதி நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட போராட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
81 உயர்நிலைப் பாடசாலைகள் மூடல்
வேலைநிறுத்தங்கள் மற்றும் மாணவர் போராட்டங்கள் காரணமாக வியாழக்கிழமை காலை 81 உயர்நிலைப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஆரம்பப் பாடசாலைகளில் சுமார் 17.5 சதவீதமானவை வேலைநிறுத்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களும் உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்துமாறு தொழிற்சங்கங்களால் கோரப்பட்டுள்ளனர்.
மேலும், அணுமின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக, வியாழக்கிழமை பிரான்ஸ் தனது உள்நாட்டு மின்சார உற்பத்தியைவிட அதிகளவிலான மின்சாரத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை
பொதுமக்களின் அதிருப்தியைக் குறைக்கும் நோக்கில், பிரான்ஸ் அரசாங்கம் தனது மூலோபாய எரிபொருள் கையிருப்பிலிருந்து ஒரு கோடி பீப்பாய் டீசலை சந்தைக்கு விடுவித்துள்ளது.
இதன்மூலம் எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள Parcoursup பல்கலைக்கழக அனுமதி முறையைச் சீர்திருத்துவதற்கும், 2028ஆம் ஆண்டளவில் அதற்குப் பதிலாக புதிய முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
பாரிஸில் பாரிய பேரணி
தலைநகர் பாரிஸில் Place de la République பகுதியிலிருந்து Place de la Nation பகுதி வரை பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், தேசிய சட்டமன்றம், ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகில் செல்லும் தொழிற்சங்கங்களின் ஆரம்ப பேரணி வழித்தடத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி இடம்பெற்ற போராட்டங்களின்போது வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்ததுடன், 2,000க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் கொள்ளையிடப்பட்டதாகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் சில தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு தற்போதைய ஆர்ப்பாட்டங்களின்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, முன்னர் பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராகப் போராடிய ‘மஞ்சள் அங்கி’ (Yellow Vest) இயக்கமும் மீண்டும் போராட்டங்களில் இணைந்துள்ளது.
குறித்த இயக்கம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளிலும் வீதித் தடைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளது.
தொழிற்சங்கத் தலைவர்கள் இந்தப் போராட்டங்களை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதுகின்றனர்.





