ஜோர்டான் தலைநகர் அம்மானில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தாக்குதலில், ஜோர்டான் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு அதிகாரி காயமடைந்துள்ளார். இச்சம்பவத்தை பயங்கரவாதச் செயலாக ஜோர்டான் அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர்.
இன்று (நவம்பர் 05) நண்பகல் சுமார் 12.20 மணியளவில், தூதரகக் கட்டடத்திற்கு அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி மீது கூர்மையான ஆயுதத்துடன் வந்த நபர் தாக்குதல் நடத்தியதாக இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர் ஜோர்டான் பாதுகாப்புப் படையின் கோப்ரல் ஜவாத் அலி கலஃப் அல்-சலைத்தா (Jawad Ali Khalaf Al-Salaita) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ கடமையில் ஈடுபட்டிருந்தபோதே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தாக்குதல் நடத்திய சந்தேகநபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளதாக ஜோர்டானின் பொதுப் பாதுகாப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் ரோந்துப் பிரிவின் கட்டளை அதிகாரி முகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பில் விசாரணை
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பாதுகாப்புப் பணியாளர்களை இலக்காகக் கொண்டு சந்தேகநபர் தாக்குதலைத் திட்டமிட்டிருந்ததாக ஜோர்டான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாக்குதலின்போது உயிரிழந்த அதிகாரியின் ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்கு தாக்குதல்தாரி முயற்சித்ததாகவும், மற்றொரு அதிகாரி தலையிட்டு அதனைத் தடுத்ததாகவும் ஜோர்டான் அரச தொலைக்காட்சியை மேற்கோள்காட்டி அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஜோர்டானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அனைத்து ஊழியர்களும் அங்கு வசிக்கும் இலங்கைப் பிரஜைகளும் பாதுகாப்பாக இருப்பதாக அம்மான் இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் தூதரகம் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.
ஜோர்டானுக்கான இலங்கைத் தூதுவர் விஷ்வநாத் அப்பொன்சு உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், ஜோர்டான் அதிகாரிகளுடன் இணைந்து அந்நாட்டின் பாதுகாப்பு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





