அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தந்தை ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் வாகனத் தரிப்பிடக் கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
42 வயதான பெட்ரிக் லிஞ்ச் (Patrick Lynch), அவரது 8 வயது மகன் ஜேம்ஸ் (James) மற்றும் 6 வயது மகள் கரோலின் (Caroline) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மவுண்ட் லெபனன் (Mount Lebanon) பகுதியில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடக் கட்டடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர மீட்புப் பிரிவினர், மூவருக்கும் இதய நுரையீரல் புத்துயிர்ப்பு சிகிச்சை (CPR) வழங்கியுள்ளனர். எனினும், மூவரும் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கொலை மற்றும் தற்கொலைச் சம்பவமாக விசாரணை
சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்த அலெகனி கவுண்டி பொலிஸார், இது கொலை மற்றும் தற்கொலைச் சம்பவமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
எனினும், சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் காரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மவுண்ட் லெபனன் பொலிஸ் பிரதானி ஜேசன் ஹேபர்மன், இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் மன அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகள் மூடப்பட்டன
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களுடன் தொடர்புடைய சமூகத்தினருக்கு ஆதரவு வழங்கும் வகையில் மவுண்ட் லெபனன் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, மார்க்ஹாம் மற்றும் வாஷிங்டன் ஆரம்பப் பாடசாலைகள் புதன்கிழமை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை நிர்வாகம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.





