இலங்கை விமானப்படையின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், ஆளில்லா விமான (Unmanned Aerial Vehicle – UAV) கட்டமைப்பை உருவாக்குவதற்காக ரூ. 4.26 பில்லியன் நிதி ஒதுக்கீட்டுக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ரூ. 4,261 மில்லியன் ஒதுக்கீடு செய்யக் கோரும் 2026ஆம் ஆண்டுக்கான துணை மதிப்பீட்டு இலக்கம் 08, இன்று (நவம்பர் 05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட பின்னர் நிறைவேற்றப்பட்டது. காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாறிவரும் பாதுகாப்புச் சூழல்கள் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், இலங்கை விமானப்படையின் செயற்பாட்டுத் திறன்களை வலுப்படுத்துவதே இந்த நிதி ஒதுக்கீட்டின் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக, வங்காள விரிகுடா மற்றும் அதனைச் சூழவுள்ள பிராந்தியங்களில் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயங்கள், தொடர்ச்சியான சீரற்ற காலநிலையால் உருவாகும் புதிய அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட மாறிவரும் செயற்பாட்டு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்த ஆளில்லா விமானக் கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
இதற்கான நிதி ஒருங்கிணைந்த நிதியம், ஏனைய அரச நிதியங்கள் அல்லது அரசாங்கக் கடன் பெறுதல் ஆகிய வழிமுறைகள் மூலம் பெற்றுக்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நம்பிக்கைப் பொறுப்புகள் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கிலான Trusts (Amendment) Bill சட்டமூலமும், இரண்டாம் வாசிப்பு விவாதத்தைத் தொடர்ந்து திருத்தங்கள் எதுவுமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.





