மின்மினி மின்ஹா
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/சது/அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம். அப்துல் ரஹீம் (SLPS-I) அவர்களின் அரச சேவை ஓய்வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான பிரியாவிடை விழா நேற்று (05) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDEC), பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PPA) மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்வி நிர்வாக அதிகாரிகள், கல்வியாளர்கள், சமூகப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலையின் பிரதி அதிபர் இசட். மொஹமட் ஸவாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி நிர்வாகம் மற்றும் பொது முகாமைத்துவப் பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.சி. நுஸ்ரத் நிலோபரா, திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எம். சித்தி பாத்திமா, கல்வி நிர்வாகப் பிரதி கல்விப் பணிப்பாளர் எச். நைறூஸ்கான், இறக்காமம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். சஹீத், பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எம். மொஹமட் சியாத், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளரும் EPSI இணைப்பாளருமான எம்.டி.எம். ஜானோபர் மற்றும் வலயக் கல்வி அலுவலகக் கணக்காளர் எம்.பி.எம். இத்ரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், பாடசாலையின் உதவி அதிபர்களான திருமதி மஜீதா தாஸீம், எம்.எம். மொஹமட் ஜெஸீல், சம்மாந்துறை பிரதம நம்பிக்கையாளர் மஜீத் (சத்தார்), மஜ்லிஸ் அஷ்ஷூரா சபையின் தலைவர் ஐ. அப்துல் ஜப்பார், சம்மாந்துறை கோட்டத்திலுள்ள பல்வேறு பாடசாலைகளின் அதிபர்கள், ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
ஓய்வுபெறும் அதிபரின் நீண்டகாலக் கல்விச் சேவையையும் பாடசாலை வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில், பிரதான பிரியாவிடை நிகழ்வுக்கு முன்னதாக மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு பாராட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதற்கமைய, கடந்த திங்கட்கிழமை (02) ஆரம்பப் பிரிவு மாணவர்களின் பெற்றோர்களால் முதலாவது பாராட்டு நிகழ்வும், செவ்வாய்க்கிழமை (03) இடைநிலைப் பிரிவு மாணவர்களின் சார்பிலான பாராட்டு நிகழ்வும், புதன்கிழமை (04) பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் இணைந்து ஏற்பாடு செய்த பாராட்டு நிகழ்வும் தனித்தனியாக இடம்பெற்றன. இந்நிகழ்வுகளின்போது ஓய்வுபெறும் அதிபருக்கு பல்வேறு கௌரவங்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன.
இன்றைய பிரதான பிரியாவிடை விழாவிலும் அதிபரின் நீண்டகாலக் கல்விப் பணிகள், நிர்வாகத் திறன், பாடசாலையின் கல்வி முன்னேற்றம் மற்றும் பௌதிக வளங்களின் அபிவிருத்திக்காக அவர் ஆற்றிய பங்களிப்புகள் நினைவுகூரப்பட்டன. இதன்போது ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் பொன்னாடை போர்த்தியும், நினைவுப் பரிசுகள் வழங்கியும் அதிபரைக் கௌரவித்தனர்.
இந்நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக, பாடசாலை ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன் ஓய்வுபெறும் அதிபர் எம். அப்துல் ரஹீமின் கல்விப் பயணம், பணியாற்றிய காலப்பகுதியில் ஆற்றிய சேவைகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளைப் பதிவு செய்யும் வகையில் ‘தடயம்’ எனும் சிறப்பு நினைவு இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நீண்டகாலமாகக் கல்விப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, பாடசாலையின் கல்வி மற்றும் பௌதிக வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச் செய்த அதிபரின் சேவைகளைப் பாராட்டிய பாடசாலைச் சமூகம், அவரது ஓய்வுக்காலம் சிறப்பாக அமையவும் எதிர்கால வாழ்க்கை மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்ததாக அமையவும் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தது.





