கொக்கைன் போதைப்பொருள் பயன்பாடு – அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் லின்னுக்கு ஒரு மாதம் தடை!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் லின், கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஒரு மாத காலம் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற T20 Blast தொடரில் நார்தாம்ப்டன்ஷயர் அணிக்காக விளையாடிய கிறிஸ் லின், அந்த அணி ஜூலை 18ஆம் திகதி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றிய தொடரில் பங்கேற்றிருந்தார்.

தொடரின் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வழக்கமான ஊக்கமருந்துப் பரிசோதனையின்போது, அவரது சிறுநீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிலுள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொக்கைன் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜூலை 31ஆம் திகதி அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட வீரர்

ஆகஸ்ட் 20ஆம் திகதி அளித்த விளக்கத்தில், ஜூலை 15ஆம் திகதி இரவு முதல் ஜூலை 16ஆம் திகதி அதிகாலை வரையான காலப்பகுதியில் கொக்கைன் பயன்படுத்தியதை கிறிஸ் லின் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும், குறித்த போதைப்பொருள் பயன்பாடு போட்டிக்கு வெளியே இடம்பெற்றதாகவும், தனது கிரிக்கெட் விளையாட்டுடன் அதற்குத் தொடர்பில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இதற்கான ஆதாரங்களையும் ஒழுங்குமுறை அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளார்.

மூன்று மாதத் தடையிலிருந்து ஒரு மாதமாகக் குறைப்பு

ஆரம்பத்தில் மூன்று மாத காலத் தடை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எனினும், போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைத் திட்டத்தை நிறைவு செய்தமைக்கான ஆதாரங்களை கிறிஸ் லின் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, அவரது தண்டனைக் காலம் ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை ஜூலை 31ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 30ஆம் திகதி வரை அமுலில் இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தடைக்காலம் நிறைவடைந்த பின்னரும் கிறிஸ் லின் இதுவரை தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore