உக்ரைனின் தென்கிழக்குப் பகுதியில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த நிலத்தடி பாதுகாப்பு மையம் மீது நடத்தப்பட்ட பாரிய வான்வழித் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான புதிய காணொளி ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த நவம்பர் 2ஆம் திகதி உக்ரைனின் சபோரிஷ்ஷியா (Zaporizhzhia) பிராந்தியத்திலுள்ள கொமிஷுவாகா (Komyshuvakha) கிராமத்தில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல், 2026ஆம் ஆண்டில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிக மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய ரஷ்யத் தாக்குதலாகக் கருதப்படுகிறது.
உக்ரைன் அதிகாரிகளிடமிருந்து பிரத்தியேகமாகப் பெறப்பட்ட பொலிஸாரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கமராக்களின் (Bodycam) பதிவுகள், வெடிகுண்டுகளின் பாகங்கள், நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் மற்றும் சம்பவ இடத்தின் காணொளிகளை ஆய்வு செய்துள்ளதாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆதாரங்களின்படி, முதலாவது தாக்குதலுக்குப் பின்னர் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதே பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மனிதாபிமான உதவிகளைப் பெற வந்த பொதுமக்கள்
தாக்குதல் இடம்பெற்ற கொமிஷுவாகா கிராமம், போர்முனையிலிருந்து சுமார் 16 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
போரின் காரணமாக அங்கிருந்த பெரும்பாலான மக்கள் வெளியேறியிருந்த நிலையில், சுமார் 200 பேர் மாத்திரமே கிராமத்தில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் வயோதிபர்கள் எனக் கூறப்படுகிறது.
அப்பகுதியில் அமைந்திருந்த நிலத்தடி பாடசாலை, பின்னர் மனிதாபிமான உதவிகள் வழங்கும் மையமாகவும், மருத்துவ மற்றும் சமூக சேவைகளை வழங்கும் இடமாகவும் மாற்றப்பட்டிருந்தது.
நவம்பர் 2ஆம் திகதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் வழங்கப்படும் என கிராம நிர்வாகம் முன்கூட்டியே அறிவித்திருந்தது.
இதனையடுத்து, உதவிப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் குறித்த மையத்தில் ஒன்றுகூடியிருந்தனர்.
முதலாவது தாக்குதலைத் தொடர்ந்து மீண்டும் குண்டுவீச்சு
உக்ரைன் அதிகாரிகள் வழங்கிய தகவல்களின்படி, நவம்பர் 2ஆம் திகதி காலை 9.45 மணிக்கும் 9.50 மணிக்கும் இடையில் பாடசாலை வளாகத்தில் இரண்டு குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொரு பெண் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, பொலிஸாரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
காலை 10.32 மணியளவில் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற எச்சரிக்கை பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.
இதனால் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் அங்கிருந்த பொதுமக்களும் நிலத்தடி பாதுகாப்பு மையத்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர்.
எனினும், காலை 10.35 மணியளவில் குறித்த நிலத்தடி மையத்தின் மீது மற்றுமொரு பாரிய குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் நிலத்தடி கட்டடம் இடிந்து விழுந்ததுடன், அங்கு தஞ்சமடைந்திருந்த பலர் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸாரின் இறுதித் தருணங்கள் கமராவில் பதிவு
சம்பவ இடத்தில் பணியாற்றிய மைக்கைலோ ரொமானோவ் (Mykhailo Romanov) மற்றும் டிமிட்ரோ பெசெடின் (Dmytro Besedin) ஆகிய இரு பொலிஸ் அதிகாரிகளின் உடற்கமராக்களில் தாக்குதலுக்கு முந்தைய தருணங்கள் பதிவாகியுள்ளன.
குறித்த காணொளிகளில், பொதுமக்கள் பாதுகாப்பு மையத்திற்குள் நுழைவதும், சில நிமிடங்களுக்குப் பின்னர் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்பதும் பதிவாகியுள்ளதாக CNN தெரிவித்துள்ளது.
வெடிப்பின்போது கமராக்களில் பிரகாசமான ஒளி தோன்றிய பின்னர் காட்சிகள் இருளடைந்துள்ளன.
இந்தத் தாக்குதலில் குறித்த இரு அதிகாரிகள் உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
3,000 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய குண்டு பயன்படுத்தப்பட்டதா?
உக்ரைன் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் தகவல்களின்படி, நிலத்தடி பாதுகாப்பு மையத்தை நேரடியாகத் தாக்குவதற்கு FAB-3000 வகை பாரிய குண்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குண்டின் மொத்த எடை சுமார் 3,000 கிலோகிராமாகும். இதில் சுமார் 1,400 கிலோகிராமுக்கும் அதிகமான வெடிபொருட்கள் உள்ளடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நிலத்தடி பாதுகாப்புக் கட்டமைப்புகள் மற்றும் பலப்படுத்தப்பட்ட கட்டடங்களைத் தாக்குவதற்காக இந்த வகைக் குண்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுப் பாகங்களை ஆய்வு செய்த ஆயுத நிபுணர்களும், FAB-3000 வகைக் குண்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற மதிப்பீட்டுடன் ஒத்துப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.
எனினும், பயன்படுத்தப்பட்ட குண்டின் வகையை CNN முழுமையாகச் சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.
ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்
உக்ரைனில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் தலைவரான டேனியல் பெல் (Danielle Bell), பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் நேரமும் இடமும் முன்கூட்டியே பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சூழலில் நடத்தப்பட்ட தாக்குதல், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறியிருக்கக்கூடும் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், பொதுமக்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் ரஷ்யா நேரடியாகக் கருத்துத் தெரிவிக்காத போதிலும், அன்றைய தினம் அந்தப் பகுதியில் உக்ரைன் இராணுவப் பிரிவுகளைத் தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இடிபாடுகளுக்குள் மேலும் 19 பேரைத் தேடும் பணிகள்
நவம்பர் 9ஆம் திகதி நிலவரப்படி, இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படும் சுமார் 19 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்காக அவர்களது உறவினர்களிடமிருந்து DNA மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், தாக்குதலுக்குப் பின்னரும் அப்பகுதியில் ரஷ்ய ஆளில்லா விமானங்களின் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டதாகத் தன்னார்வ மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 8ஆம் திகதியும் மீட்புப் பணிகள் இடம்பெற்ற பகுதியில் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அவசர சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் உயிரிழப்புகள் ஏற்படாத போதிலும், மீட்பு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட நிலத்தடி மையமே பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்ட இடமாக மாறியுள்ள இந்தச் சம்பவம், உக்ரைன் போரின் மனிதாபிமான விளைவுகள் குறித்த கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.





