போலந்தின் கிராகோவ் (Krakow) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில், திங்கட்கிழமை இரவு ஆயிரக்கணக்கான மக்கள் மௌன ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.
வார இறுதியில் இடம்பெற்ற குறித்த தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்ததுடன், சுமார் 12 பேர் காயமடைந்தனர். நவீன போலந்து வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமாக இது கருதப்படுகின்றது.
கிராகோவ் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதான சந்தைச் சதுக்கத்தில் (Main Market Square) நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், அந்நாட்டின் ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கி மற்றும் பிரதமர் டொனால்ட் டஸ்க் ஆகியோர் இணைந்து கலந்துகொண்டனர். அரசியல் ரீதியாக எதிரெதிர் நிலைப்பாடுகளைக் கொண்ட இரு தலைவர்களும் இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
ஊர்வலத்தில் பங்கேற்ற பலர் மலர்களையும் மெழுகுவர்த்திகளையும் ஏந்தியிருந்தனர். தாக்குதலில் உயிரிழந்தவர்கள் விழுந்த இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவிடங்களில் அவை வைக்கப்பட்டன. இதன்போது நகரின் வரலாற்றுச் சதுக்கக் கோபுரத்திலிருந்து இசைக்கருவி மூலம் அஞ்சலி இசையும் இசைக்கப்பட்டது.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் உயிரிழப்பு
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 24 வயதுடைய மைக்கல் ஒக்சின்ஸ்கி (Michal Oksinski) என்ற நபர், பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், குறித்த நபர் தீவிர வலதுசாரி மற்றும் தீவிரவாதக் கருத்துக்களால் தூண்டப்பட்டிருக்கலாம் என உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இருப்பினும், எந்தவொரு குறிப்பிட்ட சித்தாந்தத்தினாலும் அவர் தூண்டப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கு இதுவரை போதுமான ஆதாரங்கள் இல்லை என தேசிய வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரின் மின்னணு சாதனங்கள், தொலைபேசி மற்றும் அவர் அணிந்திருந்த இராணுவப் பாணியிலான ஆடைகளில் காணப்பட்ட அடையாளச் சின்னங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அவரது அறையில் பாம்பு உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற ‘Gadsden’ கொடி காணப்பட்டதாகவும், அந்தச் சின்னம் சுதந்திரம் மற்றும் எதிர்ப்பின் பல்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சந்தேகநபரின் வீட்டில் அவரது பெற்றோர் மற்றும் சகோதரியின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களையும் சந்தேகநபரே சுட்டுக் கொன்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. அதன் பின்னர் சுமார் 200 கிலோமீற்றர் பயணம் செய்து கிராகோவ் நகருக்குச் சென்று தாக்குதலைத் தொடர்ந்ததாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டபூர்வமாகப் பெற்ற ஆயுதங்கள் மீதான விசாரணை
சந்தேகநபரின் வாகனத்தைச் சோதனையிட்டபோது நான்கு துப்பாக்கிகளும் நூற்றுக்கணக்கான ரவைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சந்தேகநபர் மற்றும் அவரது தந்தையால் சட்டபூர்வமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் ஸ்விட் ஸ்டாராசோவிஸ் (Swit Starachowice) என்ற துப்பாக்கிச் சுடும் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். குறித்த கழகத்தில் நிலையான இலக்கை நோக்கிச் சுடும் பயிற்சிகள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், போர் நடவடிக்கைகளுக்கான துப்பாக்கிப் பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை என்றும் அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் ஆரம்பித்த பின்னர் போலந்தில் ஆயுதங்களை வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதற்கான தகைமைகள், உளவியல் பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆயுத அனுமதி வழங்கும் நடைமுறைகள் குறித்து அவசர மீளாய்வு ஒன்றை மேற்கொள்ளப் போவதாக போலந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகளுக்கும் அஞ்சலி
தாக்குதலின் போது சந்தேகநபரைத் தடுத்து நிறுத்திய பொலிஸ் அதிகாரிகளும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஜகுப் குலிக் (Jakub Kulik) என்ற அதிகாரி மார்புப் பகுதியில் சுடப்பட்டு, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்காகவும் மக்கள் மலர்கள் மற்றும் அஞ்சலிக் குறிப்புகளை வைத்து வருகின்றனர். சிறுமி ஒருவர், “பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்றி; விரைவில் குணமடையுங்கள்” எனக் குறிப்பிடப்பட்ட அட்டையொன்றையும் அங்கு வைத்துள்ளார்.
தாக்குதலின்போது உயிரிழந்த ஆறு பேரில், நான்கு பிள்ளைகளின் தாயான 50 வயதைக் கடந்த போலந்து ஓவியர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கண்காட்சி ஒன்றின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நண்பர்களுடன் நகருக்கு வந்திருந்தார். உயிரிழந்த பிரித்தானியப் பிரஜை மற்றும் ஆஸ்திரிய நாட்டவர் தொடர்பான அடையாளங்கள் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
தாக்குதலில் குதிரை வண்டிகளைச் செலுத்தும் சாரதிகள் சிலரும் படுகாயமடைந்துள்ளனர்.
கிராகோவ் நகரம் பாதுகாப்பான நகரமாகப் பெயர்பெற்றிருந்த நிலையில், இந்தச் சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி கிராகோவுக்கு இடம்பெயர்ந்த ஒல்ஹா என்ற உக்ரைன் பெண், “பாதுகாப்பைத் தேடியே எங்கள் நாட்டை விட்டு வெளியேறினோம். ஆனால் இந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்” எனத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி, தாக்குதலுக்கான நோக்கம் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்திய விதம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பதை மக்கள் அறிந்துகொள்ள விரும்புவதாகவும், உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அந்நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





