அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் அடுத்த வாரம் சீனாவில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
உலகின் மூன்று முக்கிய வல்லரசுகளின் தலைவர்கள் ஒரே சந்திப்பில் பங்கேற்கவுள்ளமை சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ட்ரம்ப் சீனாவின் ஷென்சென் நகருக்குச் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின் இறுதியில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முத்தரப்புச் சந்திப்பு நடைபெறும் என வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒலிவியா வேல்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய அணுவாயுதக் குறைப்பு மற்றும் அணுவாயுதப் பரவலைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, ஈரானின் விவகாரமும் கலந்துரையாடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உக்ரைன் போர் தொடர்பான விடயம் இந்தச் சந்திப்பில் பேசப்படாது என அமெரிக்கத் தரப்பை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
அணுவாயுதக் கட்டுப்பாடு முக்கிய பேசுபொருள்
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி மாதம் காலாவதியானதைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய அணுவாயுதக் களஞ்சியங்களைக் கொண்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையில் முக்கிய கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
இதனையடுத்து, புதிய அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமொன்றை விரைவாக உருவாக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை இரு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளது.
எனினும், சீனாவையும் உள்ளடக்கிய புதிய ஒப்பந்தமொன்றை உருவாக்க முடியும் என ட்ரம்ப் முன்னதாகத் தெரிவித்திருந்தார். சீனா தனது அணுவாயுதக் களஞ்சியத்தை விரிவுபடுத்தி வருவதால், அந்நாட்டின் ஒத்துழைப்பைப் பெறுவது சவாலானதாக அமையலாம் என அமெரிக்காவின் முன்னாள் அதிகாரிகளும் ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா – சீனா உறவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன
ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் ஆகியோர் இந்த ஆண்டில் ஏற்கனவே பலமுறை சந்தித்துள்ளனர். இருப்பினும், வர்த்தகம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டி மற்றும் தாய்வான் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பை ரஷ்யா ஆரம்பித்த பின்னர், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் சீனா ரஷ்யாவின் முக்கிய வர்த்தகப் பங்காளியாக மாறியுள்ளது.
இதற்கிடையில், ஈரானின் எண்ணெய்யை அதிகளவில் கொள்வனவு செய்யும் நாடாகவும், அந்நாட்டின் முக்கிய வர்த்தகப் பங்காளியாகவும் சீனா விளங்குகிறது. இதனால் ஈரான் தொடர்பான விவகாரமும் இந்தச் சந்திப்பில் முக்கியத்துவம் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப் நவம்பர் 18ஆம் திகதி புதன்கிழமை ஷென்சென் நகரைச் சென்றடையவுள்ளதாகவும், நவம்பர் 19ஆம் திகதி ஷி ஜின்பிங்குடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, பிலிப்பைன்ஸில் நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) உச்சிமாநாட்டிலும் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளார்.
இருப்பினும், இந்த முத்தரப்புச் சந்திப்பின் முடிவில் உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படவில்லை என்று அமெரிக்காவின் பெயர் குறிப்பிடப்படாத மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தச் சந்திப்பு தொடர்பில் உத்தியோகபூர்வமாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
உலகின் மூன்று முக்கிய வல்லரசுகளின் தலைவர்களும் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளமை, அணுவாயுதக் கட்டுப்பாடு மற்றும் சர்வதேச அரசியல் உறவுகளின் எதிர்காலம் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





