சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான பாலமான ஹுவாஜியாங் கிராண்ட் கன்யன் பாலம், போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், முக்கிய சுற்றுலாத் தலமாகவும் உருவெடுத்துள்ளது.
சீனாவின் குய்சோ மாகாணத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம், பெய்பான் ஆற்றுக்கு மேலாக சுமார் 625 மீற்றர் (2,051 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் மிக உயரமான பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் திறக்கப்பட்ட இந்தப் பாலம், முன்னதாக சுமார் இரண்டு மணித்தியாலங்கள் எடுத்த பயணத்தை வெறும் சில நிமிடங்களாகக் குறைத்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டுள்ளதுடன், பிராந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புதிய அடையாளம்
பாலம் திறக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே மூன்று மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பாலத்தின் கட்டமைப்புக்குள் நுழைந்து, கண்ணாடியால் அமைக்கப்பட்ட பார்வை மேடைகளில் நின்று கீழே விரிந்துள்ள பிரம்மாண்டமான பள்ளத்தாக்கின் அழகைக் கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சாகச அனுபவங்களை விரும்புவோருக்காக பங்கீ ஜம்பிங் (Bungee Jumping) மற்றும் பாலத்தின் வாகனப் பாதைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள திறந்த நடைபாதை போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் பொறியியல் அதிசயமாக மட்டுமன்றி, சாகச சுற்றுலாவுக்கான முக்கிய இடமாகவும் இந்தப் பாலம் பிரபலமடைந்துள்ளது.
உள்ளூர் பொருளாதாரத்திலும் மாற்றம்
பாலத்தின் வருகையால் அருகிலுள்ள கிராமங்களிலும் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் தங்குமிடங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் புதிதாக உருவாகி வருகின்றன. அத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் சிறந்த தொலைத்தொடர்பு வசதிகளை வழங்குவதற்காக புதிய கையடக்கத் தொலைபேசி சமிக்ஞை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து நேரத்தைக் குறைப்பதுடன், சுற்றுலாத்துறை மற்றும் உள்ளூர் வர்த்தகத்தையும் மேம்படுத்தியுள்ள இந்தப் பாலம், நவீன பொறியியல் கட்டுமானம் ஒரு பிராந்தியத்தின் பொருளாதாரத்தையும் வாழ்க்கை முறையையும் எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.





