இந்தியாவின் கிழக்கு இமயமலைப் பகுதியில் இதுவரை அறியப்படாத ஐந்து புதிய சிறிய கொம்புத் தவளை இனங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், குறித்த தவளைக் குழுவில் அறியப்பட்ட இனங்களின் எண்ணிக்கை இருமடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட கள ஆய்வுகளின் மூலம் இந்தப் புதிய இனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக, நத்தைகளை உணவாக உட்கொள்ளும் Jingophrys tanogogo எனும் கொம்புத் தவளை இனத்தை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இந்தியாவில் நத்தைகளை உணவாக உட்கொள்ளும் முதல் தவளை இனமாகவும், இந்தக் குடும்பத்தில் இத்தகைய உணவுப் பழக்கம் பதிவுசெய்யப்பட்ட முதல் இனமாகவும் இது கருதப்படுகிறது.
புதிதாகக் கண்டறியப்பட்ட ஐந்து இனங்களும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை:
- Jingophrys taniitatii – டானி கொம்புத் தவளை (Tanii horned frog)
- Jingophrys tanogogo – நத்தை உண்ணும் கொம்புத் தவளை (Snail-eating horned frog)
- Jingophrys siangensis – சியாங் கொம்புத் தவளை (Siang horned frog)
- Jingophrys hrdy – ஹர்டியின் கொம்புத் தவளை (Hrdy’s horned frog)
- Jingophrys wularsoni – வூ-லார்சன் கொம்புத் தவளை (Wu-Larson’s horned frog)
இந்த ஆய்வில், உள்ளூர் பழங்குடியின மக்களின் ஒத்துழைப்பும் அறிவும் முக்கிய பங்காற்றியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் உதவியுடன் சில தவளை இனங்கள் கண்டறியப்பட்டதுடன், அவற்றில் சிலவற்றுக்கு உள்ளூர் சமூகங்களைப் போற்றும் வகையில் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக, Jingophrys taniitatii என்ற இனத்தின் பெயர் அப்பகுதியில் வாழும் டானி பழங்குடியினரின் பெயரையும், உள்ளூர் அபடானி மொழியில் தவளையைக் குறிக்கும் ‘தட்டி’ என்ற சொல்லையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புகள், தவளைகளின் பரிணாம வளர்ச்சியில் இமயமலைப் பகுதி இதுவரை கருதப்பட்டதைவிட மிக முக்கியமான பங்கைக் கொண்டிருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மலைத்தொடர் உருவானதும் ஆசியப் பருவமழை அமைப்பு வளர்ச்சியடைந்ததும் பல மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பகுதியில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளதாக DNA ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
புதிதாகக் கண்டறியப்பட்ட சில தவளை இனங்கள் மிகவும் மறைவான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளதுடன், குறுகிய இனப்பெருக்கக் காலத்தில் மட்டுமே தொலைதூரக் காடுகளில் காணப்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, அவற்றின் உயிரியல் பண்புகள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு மேலதிக ஆய்வுகள் அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு நவம்பர் 11ஆம் திகதி Royal Society Open Science ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.





