குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான சுகாதார நிதியில் பில்லியன் டொலர்களைத் திசைதிருப்பும் நிர்வாகம்!

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்காக அமெரிக்க காங்கிரஸால் ஒதுக்கப்பட்ட சர்வதேச சுகாதார உதவி நிதியில் பில்லியன் கணக்கான டொலர்களை வேறு தேவைகளுக்குத் திருப்பிவிடவும், சில நிதிகளை வழங்காமல் நிறுத்தி வைக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உள்ளக வரவு செலவுத் திட்ட அறிக்கை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட குறிப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, வெளிநாடுகளில் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்காக அமெரிக்க காங்கிரஸால் ஒதுக்கப்பட்ட சுமார் 607.5 மில்லியன் டொலர் நிதியில் பெரும்பகுதியை வேறு தேவைகளுக்குத் திருப்பிவிட அல்லது வழங்காமல் நிறுத்தி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 48 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகை, ஈரான் மற்றும் உக்ரைன் போர்களால் எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் அமெரிக்காவின் பங்காளி நாடுகளின் எரிசக்தி பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ கையெழுத்திட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகளாவிய சுகாதார நிதியில் 888 மில்லியன் டொலரை அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலான புதிய ‘உலகளாவிய சுகாதார புத்தாக்க நிதியத்திற்கு’ மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, வெளிநாடுகளுக்கான சுகாதார உதவியில் 1.6 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக Public Citizen, Partners In Health மற்றும் Population Action International ஆகிய அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, தான்சானியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகள் சுகாதார உதவி நிதியில் தலா 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான குறைப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆப்கானிஸ்தான், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, காம்பியா, தென்னாப்பிரிக்கா, சோமாலியா, சூடான், திமோர்-லெஸ்தே மற்றும் யேமன் ஆகிய எட்டு நாடுகளுக்கான சுகாதார நிதி 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

குடும்பக் கட்டுப்பாட்டு சேவைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

பல தசாப்தங்களாக அமெரிக்காவின் குடும்பக் கட்டுப்பாட்டு உதவித் திட்டங்கள் மூலம் வெளிநாடுகளில் மில்லியன் கணக்கான பெண்களுக்கு கருத்தடை மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வந்துள்ளன.

Guttmacher Institute வெளியிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சர்வதேச குடும்பக் கட்டுப்பாட்டு உதவிகள் மூலம் சுமார் 34,000 தாய்மார்களின் மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த நிதி மாற்றங்கள் பெண்களின் சுகாதாரம், குடும்பங்களின் பொருளாதார நிலை மற்றும் குழந்தைகளின் நலன் ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

Partners In Health அமைப்பின் சுகாதாரக் கொள்கை மற்றும் ஆதரவுப் பிரிவின் இணை இயக்குநர் வின்சென்ட் லின், காங்கிரஸால் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு தேவைகளுக்குத் திருப்புவது அதன் தீர்மானங்களுக்கு முரணானது என விமர்சித்துள்ளார்.

அதேபோன்று, Population Action International அமைப்பின் தலைவர் நபீஹா காசி ஹட்சின்ஸ், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் காங்கிரஸிடமே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் விளக்கம்

இது தொடர்பாக CNN செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர், எதிர்பாராத நெருக்கடிகள் உள்ளிட்ட முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளிநாட்டு உதவிகளின் பயன்பாடு தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், எச்.ஐ.வி/எய்ட்ஸ், காசநோய், மலேரியா, தாய் மற்றும் குழந்தை சுகாதாரம் உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவச் சேவைகளை முன்னெடுப்பதில் நிர்வாகம் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, புதிய ‘America First Global Health Strategy’ திட்டத்தின் கீழ், உதவி பெறும் நாடுகள் தமது சொந்த சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம் என நிர்வாகம் முன்னர் தெரிவித்திருந்தது.

ஆனால், நிதிக் குறைப்புகளும் நிதி மாற்றங்களும் வளர்ந்து வரும் நாடுகளின் சுகாதாரக் கட்டமைப்புகளை மேலும் பலவீனப்படுத்தக்கூடும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்காவின் இந்த நிதி ஒதுக்கீட்டு மாற்றங்கள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை குறைவாக இருப்பதாகவும், புதிய புத்தாக்க நிதியின் கீழ் எந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக Public Citizen அமைப்பு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளதுடன், அதுதொடர்பான சட்ட நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore