உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்குப் பதிலாக, கிழக்கு உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தை ரஷ்யாவிடம் ஒப்படைப்பது தொடர்பான யோசனையை அமெரிக்கா முன்வைத்ததாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தைகளின்போது அமெரிக்கப் பிரதிநிதிகள் இந்தக் கேள்வியை எழுப்பியதாக அவர் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான யோசனை முன்வைக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், டொன்பாஸ் பிராந்தியத்திலிருந்து உக்ரைன் வெளியேறுமா?” என அமெரிக்கத் தரப்பு கேள்வி எழுப்பியதாக அவர் கூறியுள்ளார்.
எனினும், உக்ரைன் தனது பிரதேசங்களை விட்டுக்கொடுக்காது என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, வலுவான உக்ரைன் இராணுவம், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் உள்ளிட்ட விரிவான பாதுகாப்புப் பொறிமுறை உறுதிப்படுத்தப்பட்டால், அது தொடர்பான முன்மொழிவை நாட்டு மக்களிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய முக்கியமான முடிவைத் தனியாக எடுக்கத் தனக்கு உரிமையில்லை என்றும், அதனை உக்ரைன் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுவரை அமெரிக்கத் தரப்பிடமிருந்து உறுதியான விவரங்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தை
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான அமெரிக்க மத்தியஸ்தத்திலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெற்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் செய்தனர்.
பல மாதங்களுக்குப் பின்னர் இரு தரப்பினரும் பங்கேற்ற முதல் பேச்சுவார்த்தையாக இது அமைந்தபோதிலும், குறிப்பிடத்தக்க இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் பிரதிநிதிகள் உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரையும் தனித்தனியாகச் சந்தித்துள்ளனர்.
ஸ்டார்ஷீல்ட் கட்டுப்பாடுகள் குறித்தும் செலென்ஸ்கி கேள்வி
இதற்கிடையில், உக்ரைன் தனது ஆளில்லா விமானங்களின் செயற்பாட்டுக்காகப் பயன்படுத்தும் SpaceX நிறுவனத்தின் Starshield செயற்கைக்கோள் தொடர்பாடல் சேவையில் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கட்டுப்பாடுகள் குறித்தும் செலென்ஸ்கி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
முன்னரே நீக்கப்பட்டதாகக் கூறப்பட்ட கட்டுப்பாடுகள், உக்ரைனின் முன்னணிப் போர்முனைப் பகுதிகள் மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்பிலுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து நாட்களாக இந்தக் கட்டுப்பாடுகள் நீடிப்பதாகவும், அவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டவை என்ற விளக்கத்தை தாம் நம்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், புதிய கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கவில்லை என SpaceX நிறுவனம் மறுத்துள்ளது.
ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்த விவாதம்
அபுதாபிப் பேச்சுவார்த்தைகளின்போது ஐரோப்பாவுக்கான புதிய பாதுகாப்புக் கட்டமைப்பு தொடர்பாகவும் அமெரிக்கத் தரப்பு கலந்துரையாட விரும்பியதாக செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது ஐரோப்பாவிலும் உலகளவிலும் செல்வாக்கை மறுபகிர்வு செய்யும் ரஷ்யாவின் முயற்சியாக இருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மேலும், எதிர்கால சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் சாத்தியம் குறித்து அவர் வரவேற்புத் தெரிவித்துள்ளார். ஐரோப்பா இல்லாமல் உக்ரைன் தொடர்பான முக்கியமான முடிவுகள் எடுக்கப்படக்கூடாது என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், புதிய ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் போர் நிறுத்தம் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாடு எட்டப்பட்ட பின்னரே முன்னெடுக்கப்பட வேண்டும் என செலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.





