சீனாவுக்கு அமெரிக்காவின் அதிநவீன NVIDIA சிப்கள் கடத்தப்படுவதாகச் சந்தேகம்; சிங்கப்பூர் நிறுவனம் குறித்து விசாரணை!

அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மீறி, சீனாவுக்கு அதிநவீன கணினிச் சிப்களைப் பெற்றுக்கொடுக்க உதவியதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமொன்று தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான NVIDIA நிறுவனத்தின் சிப்கள், தென்கிழக்காசிய நாடுகள் ஊடாக சீனாவுக்குக் கொண்டு செல்லப்படுவதாக எழுந்துள்ள சந்தேகங்களின் பின்னணியில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட Megaspeed International நிறுவனம், கடந்த மூன்று ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியடைந்து, அமெரிக்காவின் அதிநவீன குறைக்கடத்தி சிப்களை கொள்வனவு செய்யும் ஆசியாவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

2015ஆம் ஆண்டு 7Road International என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், 2023 மார்ச் மாதம் Megaspeed எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நிறுவனத்தின் வர்த்தகப் பதிவுகளின்படி, அதன் பின்னர் NVIDIA நிறுவனத்திடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான சிப்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்துள்ளது.

இந்நிலையில், கொள்வனவு செய்யப்பட்ட சிப்கள் அங்கீகரிக்கப்படாத சீன வாடிக்கையாளர்களுக்கு மாற்றி வழங்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சீனாவுக்கான சிப் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மீறும் வழிமுறை?

2022ஆம் ஆண்டு முதல், சீனாவுக்கான அதிநவீன குறைக்கடத்தி சிப்களின் ஏற்றுமதியை அமெரிக்கா கட்டுப்படுத்தி வருகிறது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர் கணினிச் செயல்திறனுக்குப் பயன்படுத்தப்படும் NVIDIA சிப்களின் விற்பனைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும், இடைத்தரகர்கள், போலி நிறுவனங்கள் மற்றும் சிக்கலான வர்த்தகப் பரிவர்த்தனைகள் ஊடாக இந்தக் கட்டுப்பாடுகளை மீறி சிப்கள் சீனாவைச் சென்றடைவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Megaspeed நிறுவனத்தின் வர்த்தக மாதிரியும் இவ்வாறான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் தரவு மையங்களை அமைத்து, அவற்றின் கணினிச் செயல்திறனை வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு வழங்குகிறது. இதன் மூலம், நேரடியாகச் சிப்களை வாங்குவதற்குத் தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களும் அந்தச் சிப்களின் கணினிச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், Megaspeed நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கும் சீனாவின் Alibaba நிறுவனத்துடன் தொடர்புகள் இருப்பதாகவும், சில நிறுவனப் பதிவுகளில் சொத்துப் பிணையங்கள் தொடர்பான தகவல்கள் காணப்படுவதாகவும் CNN தெரிவித்துள்ளது.

Epoch AI ஆய்வு நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, கடந்த ஆண்டில் அமெரிக்க ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மீறி 290,000 முதல் 1.6 மில்லியன் வரையிலான அதிநவீன அமெரிக்க சிப்கள் சீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

சிங்கப்பூரிலும் விசாரணை

Megaspeed நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களின் நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் அரசாங்கமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

நிறுவனத்தின் சேவையகக் கொள்வனவுகள் மற்றும் அவற்றின் இறுதி இலக்கு தொடர்பில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்படும் சீனப் பெண் நிர்வாகி Alice Huang, சிங்கப்பூரில் தனது பங்கு தொடர்பில் தவறான தகவல்களை வழங்கியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் நாட்டுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், அவர் தொடர்பான குற்றச்செயல்களுக்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஏனைய விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

நிறுவனத்தின் பதில் மற்றும் அமெரிக்க அரசியல் மட்டத்தில் சர்ச்சை

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த Megaspeed நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Tan Yong Pong, அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் ஆய்வுகளுக்கு நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்க ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்கு இணங்க நிறுவனம் செயற்படுகிறதா என்பதைச் சுயாதீனமாகச் சரிபார்ப்பதற்காக அமெரிக்க சட்ட நிறுவனமொன்றின் சேவையைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் Megaspeed நிறுவனத்தை அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிறுவனமாகப் பட்டியலிடாதது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தடைப்பட்டியலில் உள்ள சீனாவின் Northwestern Polytechnical University, கடந்த மாதம் NVIDIA நிறுவனத்தின் H200 சிப்கள் நான்கை 250,000 டொலருக்கு வாங்கியதாகக் கொள்வனவுப் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மீறி அதிநவீன சிப்கள் சீனாவைச் சென்றடைவதைத் தடுப்பதற்கு கடுமையான கண்காணிப்பு மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் அவசியம் என அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் போட்டியில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் முக்கிய தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு விவகாரமாக உருவெடுத்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore