அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக வருடாந்தம் ரூ. 900 பில்லியன் செலவு! – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாத்திரம் வருடாந்தம் சுமார் 900 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் நான்கு சேவைப் பிரிவுகளின் கீழ் 223 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (14) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கான சம்பளம், கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் நாட்டின் பொதுமக்கள் செலுத்தும் வரி வருமானத்தின் மூலமே ஈடுசெய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே, பொதுமக்களின் பணம் தொடர்பில் உரிய புரிதலுடனும் பொறுப்புணர்வுடனும் ஒவ்வொரு அரச ஊழியரும் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இம்மாத இறுதிக்குள் ஆரம்ப நிலை சுகாதார அதிகாரிகள் 1,600 பேரை சுகாதாரக் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், புதிதாக நியமனம் பெறுபவர்களுக்கும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சம்பளத் திருத்தங்களின் பலன்கள் கிடைக்கப்பெறும் எனக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அடிப்படைச் சம்பள அதிகரிப்பும், ஜூலை மாதம் முதல் கொடுப்பனவு அதிகரிப்பும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore