பிசாசின் உருவத்தையும் நரகத்தின் நுழைவாயிலையும் கண்டதாக போப் பிரான்சிஸ் பதிவு; இரண்டு ஆண்டுகால ஆன்மீக நெருக்கடி குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியீடு!

மறைந்த போப் பிரான்சிஸ் தனது வாழ்க்கையில் பிசாசின் உருவத்தைக் கண்டதாகவும், நரகத்தின் நுழைவாயிலைப் பார்த்து அச்சமடைந்ததாகவும் தனது தனிப்பட்ட நாட்குறிப்புகளில் பதிவு செய்துள்ளமை தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான உள்மனப் போராட்டம் காரணமாக 2021–2022 காலப்பகுதியில் சுமார் இரண்டு ஆண்டுகள் ஆன்மீக நெருக்கடியை எதிர்கொண்டதாகவும் அவரது நாட்குறிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த போப் பிரான்சிஸ், 1992 முதல் 2024 வரையான காலப்பகுதியில் இடையிடையே நாட்குறிப்புகளை எழுதி வந்துள்ளார். அவர் பிஷப்பாகப் பணியாற்றிய காலத்திலும், போப்பாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் எழுதப்பட்ட குறிப்புகளில் சில தற்போது நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

‘The Private Diary of Pope Francis’ எனப் பெயரிடப்பட்டுள்ள 160 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை, போப் பிரான்சிஸின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரான கர்தினால் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ் எழுதியுள்ளார். இதில் போப்பின் நாட்குறிப்புகளுடன் அவரது ஆன்மீக வாழ்க்கை மற்றும் பணிகள் தொடர்பான விரிவான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

பிசாசுடன் ஏற்பட்டதாகக் கூறப்படும் மூன்று சந்திப்புகள்

தனது நாட்குறிப்புகளில் பிசாசின் தாக்குதல்களை அடிக்கடி எதிர்கொண்டதாக போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மூன்று சந்திப்புகள் தொடர்பாக அவர் விரிவாகப் பதிவு செய்துள்ளார். இரண்டு சம்பவங்கள் புவனஸ் அயர்ஸின் பேராயராகப் பணியாற்றிய காலத்திலும், மற்றொன்று 2018ஆம் ஆண்டு போப்பாக இருந்தபோதும் இடம்பெற்றதாகக் கூறியுள்ளார்.

பிசாசின் கண்கள் நெருப்பைப் போன்று இருந்ததாகவும், அவை அச்சுறுத்தும் அதேவேளை மயக்கும் தன்மையைக் கொண்டிருந்ததாகவும் அவர் விவரித்துள்ளார்.

2024 ஆகஸ்ட் 18ஆம் திகதியிட்ட குறிப்பில், முதல் இரண்டு சந்தர்ப்பங்களிலும் பிசாசின் கண்களைத் தன்னால் மறக்க முடியவில்லை என அவர் எழுதியுள்ளார்.

2018ஆம் ஆண்டு சிலி நாட்டுக்கான பயணத்தை முடித்துவிட்டு ரோம் திரும்பிய சில நாட்களுக்குப் பின்னர் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ஒரு கூட்டத்தில் இருந்தபோது பிசாசைக் கண்டதாகவும், ‘நான் விரும்பிய அனைத்தையும் இப்போது பெற்றுவிட்டேன்’ என்ற வெற்றிக் குரலைக் கேட்டதாகவும் 2021 ஜனவரி 24ஆம் திகதியிட்ட குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடவுள் தனக்கு அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பை வழங்கி விடுவித்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.

2018ஆம் ஆண்டு மற்றொரு சந்தர்ப்பத்தில், தூங்கச் செல்வதற்கு முன்னர் ‘நரகத்தின் நுழைவாயிலை’ பார்த்ததாகவும் போப் குறிப்பிட்டுள்ளார். அதனைப் பார்த்து அச்சமடைந்த அவர், ஜெபமாலையை ஆயுதமாகப் பற்றிக்கொண்டதாகவும் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட ஆன்மீகப் போராட்டம்

2021–2022 காலப்பகுதியில் போப் பிரான்சிஸ் எதிர்கொண்ட ஆன்மீக நெருக்கடி, அதிகாரத்தின் மீதான ஈர்ப்பு மற்றும் அதனைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான சோதனையுடன் தொடர்புடையதாக இருந்ததாக நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான பணிச்சுமை, தன்னால் அனைத்தையும் செய்ய முடியும் என்ற தன்னிறைவு உணர்வு, நிர்வாகப் பிரச்சினைகள், முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான அழுத்தங்கள் மற்றும் மனச்சோர்வு போன்ற காரணிகளும் இந்த நெருக்கடிக்குப் பங்களித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சோதனைகளை எதிர்கொள்வதற்காகத் தன்னிடம் அதிக பணிவையும் பொறுமையையும் வளர்த்துக்கொள்ள முயன்றதாகவும் நாட்குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

வத்திக்கான் நிர்வாகத்தில் தமக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதப்பட்ட சிலரையும் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்காமல் தொடர அனுமதித்தமை இதன் ஒரு பகுதியாக இருந்துள்ளது.

மற்றவர்களைத் தனது விருப்பத்திற்கேற்ப இயக்கும் பொம்மைகளாகக் கருதும் நிலைக்கு தான் செல்ல விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போப் பிரான்சிஸ் அதிகாரத்தின் மூலம் உலகிற்கு மேலானவராகத் தன்னை உணர்வது ஆன்மீக ரீதியில் மிகவும் ஆபத்தான நிலை எனக் கருதியதாக கர்தினால் பெர்னாண்டஸ் விளக்கியுள்ளார்.

இதனாலேயே போப்பாண்டவருக்குரிய ஆடம்பரமான அடையாளங்களையும் அதிகாரப் பெருமையையும் தவிர்த்து எளிமையான வாழ்க்கை முறையை அவர் கடைப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலி பாலியல் துஷ்பிரயோக விவகாரம் குறித்த மனவேதனை

2018ஆம் ஆண்டு சிலியில் மதகுருமார்களுடன் தொடர்புடைய பாலியல் துஷ்பிரயோக விவகாரம் தொடர்பாகவும் போப் பிரான்சிஸ் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகங்களை அறிந்திருந்தும் மறைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு பிஷப் தொடர்பான விவகாரத்தை ஆரம்பத்தில் போதிய தீவிரத்துடன் கையாளவில்லை என அப்போது போப் விமர்சிக்கப்பட்டார்.

பின்னர் தனது அணுகுமுறைக்காக அவர் மன்னிப்புக் கோரியதுடன், சிலி நாட்டின் அனைத்து பிஷப்புகளையும் ரோமுக்கு அழைத்திருந்தார். இதன்போது அந்நாட்டு பிஷப்புகள் அனைவரும் ஒரே நேரத்தில் தமது பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தச் சம்பவம் குறித்து நாட்குறிப்பில் எழுதியிருந்த போப், சிலியின் நிலைமை மற்றும் விமானத்தில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற உரையாடல் காரணமாக மனமுடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விவகாரத்தின் தீவிரத்தை ஆரம்பத்தில் தான் உணரவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அடுத்த போப் லியோ XIV குறித்து பாராட்டு

தற்போதைய போப் லியோ XIV என அறியப்படும் கர்தினால் ரொபர்ட் பிரிவோஸ்ட் குறித்தும் போப் பிரான்சிஸ் தனது நாட்குறிப்பில் பாராட்டுகளைப் பதிவு செய்துள்ளார்.

அவரைச் சிறந்த ஆன்மீக வழிகாட்டி, தாராள மனப்பான்மை கொண்ட மதப்பணியாளர் மற்றும் குறை கூற முடியாத நேர்மையான மனிதர் எனப் போப் வர்ணித்துள்ளதாக கர்தினால் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை விமர்சித்த கர்தினால் ரொபர்ட் சாரா மற்றும் ஜெர்ஹார்ட் முல்லர் ஆகியோர் குறித்தும் அவர் நேர்மறையான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

சோர்வுக்கு மத்தியிலும் தொடர்ந்த அர்ப்பணிப்பு

போப் பிரான்சிஸின் நாட்குறிப்புகள் அவரது பணிகளுக்கான அர்ப்பணிப்பையும், அடிக்கடி எதிர்கொண்ட உடல் மற்றும் மனச் சோர்வையும் வெளிப்படுத்துகின்றன.

அவர் அர்ஜென்டினாவில் இருந்த காலத்திலும், போப்பாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் ஓய்வின்றிப் பணியாற்றியுள்ளார். விடுமுறைக்காக வத்திக்கானுக்கு வெளியே அவர் ஒருபோதும் சுற்றுலா செல்லவில்லை எனவும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு தன்னை ஆன்மீக ஆதரவு இன்றி, மிகுந்த சோர்வுடன் உணர்ந்ததாக அவர் பதிவு செய்துள்ளார்.

2013 மார்ச் 13ஆம் திகதி போப்பாகத் தெரிவுசெய்யப்பட்டு பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்ட ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோவின் உள்ளார்ந்த ஆன்மீக வாழ்க்கையை வெளிப்படுத்துவதே இந்த நாட்குறிப்புகளின் நோக்கம் என கர்தினால் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

2025 ஏப்ரல் 21ஆம் திகதி, 88 வயதில் போப் பிரான்சிஸ் உயிரிழந்தார். இரட்டை நிமோனியா காரணமாக சில வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது இறுதி நாட்களிலும் மருத்துவர்களின் அறிவுறுத்தல்களை மீறி புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த மக்களைச் சந்தித்து ஆசீர்வதித்திருந்தார்.

அவரது இறுதிச்சடங்கு 2025 ஏப்ரல் 26ஆம் திகதி வத்திக்கானில் நடைபெற்றது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

போப் பிரான்சிஸின் இந்தத் தனிப்பட்ட நாட்குறிப்புகள் வத்திக்கான் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளதுடன், அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆங்கிலப் பதிப்பையும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore