லண்டன் நிலத்தடி ரயிலில் (London Underground) நடனமாடியும் பாடல்களுக்கு உதட்டசைவு செய்தும் சமூக வலைத்தளங்களில் உலகப் புகழ்பெற்ற ‘Tube Girl’ என அழைக்கப்படும் சப்ரினா பஹ்சூன், மனநலப் பாதிப்பு எனத் தவறாகக் கருதப்பட்ட நிலையில், அவருக்கு அரிய வகை தன்னுடல் தாக்கு மூளை நோய் (Autoimmune Encephalitis) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
26 வயதான சப்ரினா பஹ்சூன், 2023ஆம் ஆண்டு ரயிலில் தானே பதிவு செய்த நடனக் காணொளிகள் வைரலானதைத் தொடர்ந்து உலகளாவிய கவனத்தைப் பெற்றார். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் 900,000க்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைப் பெற்றதுடன், முன்னணி வர்த்தக நிறுவனங்களின் விளம்பர ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டார். இசைத்துறையிலும் தனது பயணத்தைத் தொடர்ந்துவந்தார்.
எனினும், இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்பட்ட திடீர் உடல்நல மாற்றம் அவரது வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைத்தது.
திடீரென ஏற்பட்ட மனநல அறிகுறிகள்
இசைக்குழுவான FLO உடன் லண்டன் நிலத்தடி ரயிலில் காணொளி ஒன்றைப் பதிவு செய்த அதே நாளின் மாலையில், சப்ரினா திடீரென கத்துதல், அழுதல் மற்றும் தொடர்பற்ற வகையில் உரையாடுதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கினார்.
அடுத்த நாள் தனது காதலருடனான உறவை முறித்துக்கொண்டார். அவரது வழக்கத்திற்கு மாறான நடத்தையைக் கவனித்த சகோதரிகள் அவரைச் சந்தித்து நிலைமையைப் பரிசோதித்தனர்.
பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததுடன், தனக்குத் தானே தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும், புரிந்துகொள்ள முடியாத காணொளிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவரது சகோதரிகள் அவசர மருத்துவ உதவிக்காக 999 என்ற இலக்கத்திற்கு அழைத்தனர்.
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆரம்பத்தில் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை காரணமாக இந்த அறிகுறிகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டு, தூக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால், வீட்டில் பொருட்களை உடைத்தல் மற்றும் மாயத் தோற்றங்கள் ஏற்படுவதாகக் கூறுதல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்ததால், பொலிஸார் அவரை கைவிலங்கிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் மனநல மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், மனநோய் எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றார்.
அந்த மருந்துகள் தன்னை முற்றிலும் செயலற்ற நிலைக்குக் கொண்டுசென்றதாக சப்ரினா தெரிவித்துள்ளார்.
தான் முன்பு மிகவும் சுறுசுறுப்பான நபராக இருந்த நிலையில், பின்னர் பேசுவதற்கும், உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்வதற்கும் சிரமப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் கண்டறியப்பட்ட உண்மையான நோய்
மருத்துவமனையில் சுமார் இரண்டு மாதங்கள் மனநல சிகிச்சைப் பிரிவில் இருந்த பின்னரே அவருக்கு ‘Anti-NMDA Receptor Encephalitis’ எனப்படும் அரிய தன்னுடல் தாக்கு மூளை அழற்சி நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
அவரது கருப்பையில் இருந்த ‘Teratoma’ எனப்படும் கட்டிகள் இந்த நோயுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டன. அந்தக் கட்டிகளால் உருவான எதிரணுக்கள் அவரது உடலையே தாக்கியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஜூன் மாதம் அறுவைச் சிகிச்சை மூலம் அந்தக் கட்டிகள் அகற்றப்பட்டன.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவரது நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டதுடன், சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் திறனும் படிப்படியாக மேம்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் நான்கு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சப்ரினா, தற்போது தனது சொந்த நாடான மலேசியாவில் மீண்டு வருவதுடன், அனுபவித்த மன உளைச்சல்களிலிருந்து மீள்வதற்கான உளவியல் சிகிச்சையையும் பெற்று வருகிறார்.
முழுமையாகக் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படும் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளர்களில் தானும் ஒருவர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மருத்துவமனை சிகிச்சை குறித்து விசாரணை
தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் சில குறைபாடுகள் இருந்ததாக சப்ரினா கவலை தெரிவித்துள்ளார்.
மனநலப் பாதிப்பு கொண்ட நோயாளி எனத் தன்னை வகைப்படுத்திய பின்னர், உண்மையான நோயைக் கண்டறிவதற்கான அவசரத் தன்மை மருத்துவச் சிகிச்சையில் காணப்படவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் இன்றி ஒரு பெண்ணை மனநோயாளி என முடிவுசெய்தது தவறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சப்ரினா முதலில் சிகிச்சை பெற்ற Imperial College Healthcare NHS Trust மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு ஏற்பட்ட அனுபவத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளது.
ஆரம்ப மருத்துவ மதிப்பீட்டில் சில விடயங்கள் உரிய முறையில் தொடர்ந்து பரிசோதிக்கப்படவில்லை என்பதை உள்நிலை மதிப்பாய்வு கண்டறிந்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அரிய நோய் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
Anti-NMDA receptor encephalitis என்பது குறிப்பாக இளம் வயதினரையும் பெண்களையும் அதிகம் பாதிக்கக்கூடிய அரிய தன்னுடல் தாக்கு நோயாகும்.
Encephalitis International அமைப்பின் தகவலின்படி, இந்நோயாளர்களில் சுமார் 40 சதவீதத்தினர் 18 வயதுக்குட்பட்டவர்கள்.
இந்த நோயின் முக்கியமான ஆபத்துகளில் ஒன்று, ஒருவரின் நடத்தை மற்றும் ஆளுமை மிகக் குறுகிய காலத்தில் திடீரென மாறக்கூடும் என்பதாகும்.
மூளையில் ஏற்படும் அழற்சியின் காரணமாக ஒருவர் திடீரென குழப்பம், மன உளைச்சல் மற்றும் மனநோய் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தக்கூடும் என அந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அவா ஈஸ்டன் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நோய் ஆரம்பத்தில் அடையாளம் காணப்படாமல் போகும் அபாயம் இருப்பதாகவும், எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனிப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் அனைத்து வகையான மூளை அழற்சி நோய்களும் அரிதானவை என NHS தெரிவிக்கிறது. அதேவேளை, Encephalitis International அமைப்பின் மதிப்பீட்டின்படி, பிரிட்டனில் ஆண்டுதோறும் சுமார் 6,000 பேர் இத்தகைய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அனுபவத்தைப் பகிர்வு
தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கடந்த ஒக்டோபர் மாதம் TikTok காணொளி மூலம் முதன்முதலில் வெளிப்படுத்திய சப்ரினா, இந்த அரிய நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
மருத்துவச் சிகிச்சையில் தமக்குத் தேவையான கவனம் கிடைக்கவில்லை என உணரும்போது, நோயாளர்கள் தங்களுக்கான உரிய சிகிச்சையைக் கோருவதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் புத்தாண்டில் மீண்டும் சமூக வலைத்தள உள்ளடக்க உருவாக்கப் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள அவர், வாழ்க்கையைப் புதிய கண்ணோட்டத்துடனும் நன்றியுணர்வுடனும் அணுக எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது அனுபவம் மற்றொருவர் இத்தகைய துயரத்தை எதிர்கொள்வதைத் தடுக்க உதவ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





