ஹிஜாப் அணியாமல் பாடல் நிகழ்ச்சி நடத்திய ஈரான் பெண் பாடகிக்கு 74 கசையடிகள் தண்டனை!

ஈரானில் கட்டாய ஹிஜாப் விதிமுறைகளை மீறி பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் பாடகி பரஸ்தூ அஹ்மதிக்கு 74 கசையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, பாடகியின் சட்டத்தரணி மொஸ்தபா நிலியை மேற்கோள்காட்டி ஈரான் மனித உரிமைகள் அமைப்பு (IHRNGO) அறிவித்துள்ளது.

பாடகி பரஸ்தூ அஹ்மதியுடன், அவரது இசை நிகழ்ச்சிக் குழுவைச் சேர்ந்த மேலும் நால்வருக்கும் தலா 74 கசையடிகள் வழங்கப்பட்டுள்ளன.

இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மொஹ்சென் லஷ்கரி மற்றும் இசைக் கலைஞர்களான சொஹைல் ஃபகிஹ்-நசிரி, அமீன் தஹேரி, அமீர்-அலி பிர்னியா ஆகியோருக்கும் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்திய ‘Caravanserai Concert’

2024 டிசம்பர் மாதம் ஈரானின் கோம் நகருக்கு அருகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டெய்ர்-இ கசின் கரவான்செராய் பகுதியில் இந்த இசை நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டது.

நேரடி பார்வையாளர்கள் இன்றி பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சியில், ஆண் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பரஸ்தூ அஹ்மதி பாடல்களைப் பாடியிருந்தார்.

அப்போது அவர் நீண்ட கறுப்பு நிறக் கையில்லாத ஆடையை அணிந்திருந்ததுடன், கட்டாய ஹிஜாப் விதிமுறைகளை மீறி தலைமுடியை மறைக்காமல் காணப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியின் காணொளி இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து ஈரான் அதிகாரிகள் பாடகி மற்றும் நிகழ்ச்சிக் குழுவினருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.

ஈரானின் நீதித்துறையுடன் தொடர்புடைய ‘Mizan News Agency’, இந்த நிகழ்ச்சியைச் சட்டவிரோதமான இசை நிகழ்ச்சி எனக் குறிப்பிட்டிருந்தது. நாட்டின் சட்ட மற்றும் மத விதிமுறைகளுக்கு இந்த நிகழ்ச்சி இணங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது.

கசையடிகளுடன் இரண்டு ஆண்டுகள் தடை

பொது ஒழுக்கத்தை மீறியதாகவும், ஆபாசமான மற்றும் ஒழுக்கமற்ற இணைய உள்ளடக்கத்தைத் தயாரித்து வெளியிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவருக்கும் நீதிமன்றம் தண்டனை விதித்தது.

கசையடிகளுக்கு மேலதிகமாக, இரண்டு ஆண்டுகளுக்கு கலை மற்றும் இசை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றமும் கடந்த செப்டம்பர் மாதம் உறுதிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் கலைஞர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த கவலை

கசையடி தண்டனையை கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் மனித கண்ணியத்தை இழிவுபடுத்தும் தண்டனை என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) வர்ணித்துள்ளது.

கட்டாய ஹிஜாப் நடைமுறைகளை எதிர்க்கும் பாடகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக ஈரான் அதிகாரிகள் தன்னிச்சையான கைதுகள், வழக்குத் தொடர்தல் மற்றும் கசையடி தண்டனைகளை அதிகரித்து வருவதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கிடையில், ஈரானிய பாடகி ஹிவா செய்ஃபிசாதேவுக்கும் தெஹ்ரானில் 2025 பெப்ரவரி மாதம் பாரம்பரிய ஈரானிய இசை நிகழ்ச்சியை நடத்தியதற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், புகழ்பெற்ற 13ஆம் நூற்றாண்டு பாரசீகக் கவிஞர் சாடி ஷிராசியின் சில கவிதை வரிகளை மட்டுமே பாடியதாகவும், அது எவ்வாறு ஒழுக்கக்கேட்டை ஊக்குவிப்பதாக அமையும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பரஸ்தூ அஹ்மதி மற்றும் அவரது இசைக்குழுவினருக்கு வழங்கப்பட்ட கசையடி தண்டனை நிறைவேற்றம் தொடர்பாக ஈரான் அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வ கருத்து எதனையும் வெளியிடவில்லை.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore