விண்வெளியில் அணுவாயுத செயற்கைக்கோளை நிலைநிறுத்த ரஷ்யா திட்டமா? – நேட்டோ கடும் எச்சரிக்கை!

விண்வெளியில் அணுவாயுதம் பொருத்தப்பட்ட செயற்கைக்கோளை நிலைநிறுத்த ரஷ்யா தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, விண்வெளியில் ஏற்படக்கூடிய எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக நேட்டோ கூட்டமைப்பு தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் என அதன் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.

அடுத்த 60 நாட்களுக்குள் ரஷ்யா அணுவாயுதம் பொருத்தப்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தக்கூடும் என்ற உளவுத்துறைத் தகவல்கள் இம்மாதம் நேட்டோ உறுப்பு நாடுகளிடையே பகிரப்பட்டுள்ளதாக ஜேர்மனியின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இந்தத் தகவல்களைத் தயாரித்த நாடு எது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஜேர்மனியின் பேர்லினில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாகக் கேட்கப்பட்டபோது, நேட்டோவின் ஒவ்வொரு அங்குலப் பிரதேசத்தையும் பாதுகாப்பதற்கு கூட்டமைப்பு எப்போதும் நடவடிக்கை எடுக்கும் என்றும், அதில் விண்வெளிப் பாதுகாப்பும் உள்ளடங்கும் என்றும் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவ ரீதியான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து, தேவையான இடங்களில் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் புதுப்பிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘Sputnik-S’ எனப் பெயரிடப்பட்ட செயற்கைக்கோள்?

ஜேர்மனியின் NDR மற்றும் WDR தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் Süddeutsche Zeitung நாளிதழ் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ரஷ்யாவின் திட்டமிடப்பட்ட செயற்கைக்கோள் ‘Sputnik-S’ என அழைக்கப்படுவதாகவும், அதில் அணுவாயுதம் பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செயற்கைக்கோள் விண்வெளியில் உள்ள ஏனைய செயற்கைக்கோள்களைச் செயலிழக்கச் செய்யவோ அல்லது அழிக்கவோ பயன்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக, இராணுவத் தொடர்பாடல், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் சேவைகளுக்கு அத்தியாவசியமான செயற்கைக்கோள்கள் இதனால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்தச் செய்திகளை வெளியிட்ட ஜேர்மன் ஊடகங்கள், பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ மற்றும் உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டியுள்ளன.

ரஷ்யா குற்றச்சாட்டுகளை நிராகரிப்பு

இந்தத் தகவல்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ், சமீபத்திய உளவுத்துறை அறிக்கைகளைத் தாம் பார்வையிடவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அடையாளம் தெரியாத ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனிக்கான ரஷ்யத் தூதரகமும் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது. மேலும், இவை ரஷ்யாவுக்கு எதிரான பிரசார நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜேர்மன் அதிபர் கவலை

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டேவுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ஜேர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், ரஷ்யாவின் திட்டம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

எனினும், இத்தகைய செய்திகள் ரஷ்யா எந்தளவுக்கு மோதலைத் தீவிரப்படுத்தத் தயாராக உள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளியில் அணுவாயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா திட்டமிடுவதாக வெளியாகும் தகவல்கள் புதிதல்ல என்றாலும், அவை அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் அரசாங்கப் பேச்சாளரும் இந்த அறிக்கைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளதுடன், அதேவேளை உறுதிப்படுத்தப்படாத அச்சுறுத்தல்கள் தொடர்பில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய விண்வெளி முகமையின் தலைவர் ஜோசப் அஷ்பாச்சரும் விண்வெளியில் அணுவாயுதங்கள் நிலைநிறுத்தப்படுவது மிக மோசமான அச்சுறுத்தல் நிலையாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

1967 விண்வெளி ஒப்பந்தம் என்ன கூறுகிறது?

ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் கையெழுத்திட்டுள்ள 1967ஆம் ஆண்டின் வெளி விண்வெளி ஒப்பந்தம் (Outer Space Treaty), விண்வெளியின் சுற்றுப்பாதையில் பேரழிவு ஆயுதங்களை நிலைநிறுத்துவதைத் தடை செய்கிறது.

இருப்பினும், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் இராணுவத் திறன்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக, எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களை இலக்குவைக்கும் தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றன.

2024ஆம் ஆண்டு, அணுவாயுதம் பொருத்தப்பட்ட விண்வெளி எதிர்ப்பு செயற்கைக்கோள் ஆயுதத்தை ரஷ்யா உருவாக்கி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது. எனினும், அந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா நிராகரித்திருந்தது.

அப்போது கருத்துத் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், விண்வெளியில் அணுவாயுதங்களை நிலைநிறுத்துவதற்கு ரஷ்யா எப்போதும் எதிராகவே இருந்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவிடமும் விண்வெளி ஆயுதங்கள்?

இதற்கிடையில், கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க விமானப்படைச் செயலாளர் ட்ராய் மெய்ங்க், அமெரிக்காவிடம் பூமியைச் சுற்றிவரும் விண்வெளிக் கட்டுப்பாட்டு ஆயுதங்கள் (Space-control weapons) இருப்பதாகத் தெரிவித்திருந்தார். எனினும், அவற்றின் தன்மை குறித்த மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை.

இதற்குப் பதிலளித்த ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் பேச்சாளர் பெஸ்கோவ், விண்வெளி எந்தவொரு ஆயுதங்களும் இல்லாத பகுதியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ரஷ்யாவின் அணுவாயுத செயற்கைக்கோள் தொடர்பான புதிய தகவல்கள் சர்வதேச அளவில் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், விண்வெளியை இராணுவ மோதல்களின் புதிய களமாக மாற்றும் அபாயம் குறித்த விவாதங்களையும் தீவிரப்படுத்தியுள்ளன.

எனினும், ரஷ்யா உண்மையில் இத்தகைய செயற்கைக்கோளை ஏவத் திட்டமிட்டுள்ளதா என்பது இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore