சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய காணொளியில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரை தாக்கியதாகக் காணப்பட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 3 ஆம் திகதி பிற்பகல், மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர் குறித்த எரிபொருள் நிலையத்தின் ஊழியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கோட்டை – மாதிவெல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் இன்று மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
QR குறியீடு இன்றி எரிபொருள் பெற்றுக்கொள்ள முயன்ற சந்தேகநபருக்கு, அதற்கான அனுமதி வழங்க முடியாது என ஊழியர் தெரிவித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது தாக்குதலாக மாறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், விசாரணைகளின் போது தாக்குதலுக்கு உள்ளான ஊழியர் இவ்விடயத்தை சுமூகமாக தீர்த்துக்கொள்ள விரும்புவதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான விவகாரம் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான ஊழியர், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க விருப்பமில்லை எனவும் பொலிஸாரிடம் அறிவித்துள்ளார்.





