பிக்சாரின் (Pixar) பிரபலமான ‘டாய் ஸ்டோரி’ (Toy Story) திரைப்படத் தொடரின் ஐந்தாவது பாகமான ‘டாய் ஸ்டோரி 5’, வசூல் சாதனைகளை முறியடித்து 2026ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆரம்ப வார இறுதி (Opening Weekend) வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
முதலாவது டாய் ஸ்டோரி திரைப்படம் வெளியாகி 31 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த புதிய பாகமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் முதல் வார இறுதியில் 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வசூலித்துள்ள இப்படம், சர்வதேச சந்தைகளிலும் 152 மில்லியன் டொலர்கள் வசூலித்துள்ளது.
இதன்மூலம் உலகளாவிய ஆரம்ப வார இறுதி வசூல் 312 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்து, 2026ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆரம்ப வசூல் சாதனையை படைத்துள்ளது.
மேலும், 2019ஆம் ஆண்டு வெளியான ‘டாய் ஸ்டோரி 4’ திரைப்படத்தின் 120 மில்லியன் டொலர் ஆரம்ப வசூல் சாதனையையும் முறியடித்து, இந்த தொடரின் வரலாற்றிலேயே அதிக ஆரம்ப வசூலைப் பெற்ற திரைப்படமாக மாறியுள்ளது.
அதேநேரம், 2018ஆம் ஆண்டு வெளியான ‘இன்க்ரெடிபிள்ஸ் 2’ (Incredibles 2) திரைப்படத்தின் 182.7 மில்லியன் டொலர் வசூலுக்கு அடுத்ததாக, வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய அனிமேஷன் திரைப்பட ஆரம்ப வசூலாகவும் இது பதிவாகியுள்ளது.
திரைப்பட விமர்சகர்கள், ‘டாய் ஸ்டோரி 5’ திரைப்படம் 2026ஆம் ஆண்டு முடிவதற்குள் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வசூலை எட்டக்கூடும் என எதிர்பார்க்கின்றனர்.
இதுவரை வெளியான முதல் நான்கு டாய் ஸ்டோரி திரைப்படங்களும் உலகளவில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதுடன், 11 ஒஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு 3 விருதுகளை வென்றுள்ளன.
‘டாய் ஸ்டோரி 5’ திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த ஜூன் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.





