சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), கர்ப்பத்திற்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட்டில் இணையும் பெண் வீராங்கனைகளுக்காக “Return to Play Post-Pregnancy Guidelines” எனும் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெண்கள் கிரிக்கெட் துறை தொடர்ந்து தொழில்முறை ரீதியாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், பல வீராங்கனைகள் தங்களது விளையாட்டு வாழ்க்கையின் போது குடும்பம் அமைத்து, குழந்தை பிறந்த பின்னரும் உயர்மட்ட கிரிக்கெட்டிற்கு திரும்ப விரும்புகின்றனர். இதனை எளிதாக்கும் நோக்கில் இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல்கள் வீராங்கனைகள், கிரிக்கெட் வாரியங்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நடைமுறை ரீதியான ஆதரவு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ICC வெளியிட்டுள்ள “6 Rs” முறைமையின் கீழ்:
Ready (தயார் நிலை)
Review (மதிப்பாய்வு)
Restore (மீட்பு)
Recondition (உடல் தகுதி மேம்பாடு)
Return (மீண்டும் விளையாட்டில் இணைதல்)
Refine (தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மேம்பாடு)
எனும் ஆறு கட்டங்களின் மூலம் வீராங்கனைகள் பாதுகாப்பாகவும் நிலையான முறையிலும் மீண்டும் கிரிக்கெட்டில் ஈடுபட வழிகாட்டப்பட்டுள்ளது.
மேலும், குழந்தை பராமரிப்பு வசதிகள், பயிற்சி நேரங்களில் நெகிழ்வுத்தன்மை, பயண வசதிகள், குழந்தைக்கு உணவூட்ட தனிப்பட்ட இடங்கள் போன்ற ஆதரவு அம்சங்களும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதலை உருவாக்குவதில் ICC மருத்துவ ஆலோசனைக் குழு உறுப்பினரும் ஆஸ்திரேலிய அணியின் மருத்துவருமான டாக்டர் பிலிப்பா இங் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இதுகுறித்து ICC தலைவர் ஜெய் ஷா தெரிவித்ததாவது:
“தாய்மைக்கும் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் இடையில் எந்த வீராங்கனையும் தேர்வு செய்ய வேண்டிய நிலை இருக்கக் கூடாது. இந்த வழிகாட்டுதல்கள் பெண்கள் கிரிக்கெட்டில் இன்னும் ஆதரவான சூழலை உருவாக்கும் முக்கியமான முன்னேற்றமாகும்.”
இதேவேளை, 2021ஆம் ஆண்டு குழந்தை பெற்ற பின்னர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பிய மேற்கிந்திய தீவுகள் வீராங்கனை அஃபி ப்ளெச்சர், இந்த முயற்சி எதிர்காலத்தில் மேலும் பல வீராங்கனைகள் தாய்மைக்குப் பிறகும் கிரிக்கெட்டில் தொடர உதவும் என பாராட்டியுள்ளார்.





